/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காலநிலை மாற்ற சவால்கள் எதிர்கொள்ள கவர்னர் அழைப்பு
/
காலநிலை மாற்ற சவால்கள் எதிர்கொள்ள கவர்னர் அழைப்பு
ADDED : ஜூன் 04, 2025 01:16 AM

பெங்களூரு: ''காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டும்,'' என்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசினார்.
ஹரியானாவின் ஓ.பி.ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகம், பெங்களூரின் ஆர்.வி.பல்கலைக்கழகம் இணைந்து, 'பெங்களூரின் நிலையான வளர்ச்சிக்கு இலக்குகளை மேம்படுத்துதல், அறிவு பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு மூலம் கூட்டாண்மைகளின் தாக்கத்தை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் நேற்று உச்சி மாநாடு நடத்தியது.
இதில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:
நாட்டின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மையமாக உள்ளது.
இருப்பினும், வளங்களை அணுகுவதில் நகரம் பல சவால்கள், அழுத்தங்களை எதிர்கொள்கிறது. காலநிலை மாற்றங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். கார்பன் வெளியேற்றம், காற்று மாசுபாடு, காடுகள் அழிப்பு, பிற காரணிகளால் காலநிலை தொடர்பான பிரச்னை ஏற்படுகிறது.
இதற்கு தீர்வுகளை கண்டறிவது அவசியம். அவசர தேவையாகவும் உள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீர், பிற வளங்களை பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானது.
மத்திய அரசின் மேக் இன் இந்தியா, ஸ்வச் பாரத் அபியான், தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் நாட்டின் நிலையான வளர்ச்சி, இலக்குடன் ஒத்துப் போகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், பல்கலைக்கழக துணைவேந்தர் சி.ராஜ்குமார், ஆர்.வி.பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஏ.வி.எஸ்.மூர்த்தி, உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி மைக்கேல் டி.வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.