மாணவர்களை ஏற்றி செல்லாத அரசு பஸ் ஓட்டுநருக்கு கண்டனம்
மாணவர்களை ஏற்றி செல்லாத அரசு பஸ் ஓட்டுநருக்கு கண்டனம்
ADDED : ஆக 13, 2026 12:11 AM

விஜயபுரா: மாணவர்கள் காத்திருப்பது தெரிந்தும், பஸ்சை நிறுத்தாமல் சென்ற அரசு பஸ் ஓட்டுநரை, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கடுமையாக கண்டித்தார்.
விஜயபுரா மாவட்டம், பபலேஸ்வரா தாலுகாவின் மமதாபுரா கிராமம் அருகில், பிரதான சாலை ஒன்றில் நேற்று முன் தினம் மாலை, பள்ளி முடிந்து மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ், மாணவர்களை பார்த்தும் நிற்காமல் சென்றது. மாணவர்கள் கை காட்டியும் ஓட்டுநர் அலட்சியம் செய்தார்.
அப்போது இதே வழியாக, காரில் பயணித்த அமைச்சர் எம்.பி.பாட்டீல், சாலையில் மாணவர்கள் கூட்டமாக நிற்பதை பார்த்து, உடனடியாக தன் காரை நிறுத்தினார். காரில் இருந்து இறங்கி, மாணவர்களின் அருகில் சென்று பேசினார்.
மாணவர்கள் தினமும் பஸ்சுக்காக தாங்கள் படும் அவதியை, அமைச்சரிடம் விவரித்தனர். அரசு பஸ்கள் நிற்பதே இல்லை. வீட்டுக்கு செல்ல மிகவும் தாமதமாகிறது என, கூறினர்.
மாணவர்களின் பிரச்னையை கேட்டறிந்த அமைச்சர் எம்.பி.பாட்டீல், அப்போதே வடமேற்கு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டு அதிகாரியை, மொபைல் போனில் தொடர்பு கொண்டார். மாணவர்களை ஏற்றிக்கொள்ளாமல் சென்ற பஸ் ஓட்டுநர், நடத்துநரின் செயலை கண்டித்தார். அவர்கள் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
கிராமப்புற மாணவர்களின் போக்குவரத்துக்கு, எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது. நிறுத்தங்களில் பஸ்கள் கட்டாயம் நிற்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகளை அமைச்சர் எச்சரித்தார்.
