பழுதடைந்த அரசு பஸ்சால் பாதிப்பு மாணவிக்கு நிவாரணம் வழங்க உத்தரவு
பழுதடைந்த அரசு பஸ்சால் பாதிப்பு மாணவிக்கு நிவாரணம் வழங்க உத்தரவு
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:52 PM
கலபுரகி: பஸ் பழுதடைந்து நின்றதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, நிவாரணம் வழங்கும்படி கே.கே.ஆர்.டி.சி., எனும் கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகத்துக்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பீதரை சேர்ந்த மாணவி தேஜஸ்வினி பசவராஜ். இவர், கடந்த 2025 நவம்பர் 16ம் தேதி பீதரில் இருந்து, தாவணகெரேவுக்கு பயணிக்க கே.கே.ஆர்.டி.சி.,யின் ஸ்லீப்பர் பஸ்சில், இருக்கை முன் பதிவு செய்திருந்தார்.
இந்த பஸ் மாலை 6:00 மணிக்கு, பீதரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6:00 மணிக்கு தாவணகெரேவை அடைந்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் பீதரில் இருந்து புறப்பட்டது என்றாலும், ஹும்னாபாத் அருகில் பழுதடைந்து நின்றது. அதன்பின் கலபுரகி டிப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் பஸ்சை பழுது பார்க்க முடியவில்லை. மறுநாள் தாவணகெரேவில், மாணவி தேஜஸ்வினி தேர்வு எழுத வேண்டியிருந்தது. எனவே மாற்று பஸ் வசதி செய்யும்படி, அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை.
வேறு வழியின்றி, கலபுரகியில் இருந்து, தாவணகெரேவுக்கு வாடகை காரில் செல்ல, 18,700 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி வந்தது. இது குறித்து, நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையிட்ட மாணவி, வாடகை காருக்கு தான் செலவிட்ட பணத்தையும், டிக்கெட் கட்டணத்தையும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என, கோரினார்.
விசாரணை நடத்திய தீர்ப்பாயம், வாடகைக் காருக்கு மாணவி செலுத்திய 18,700 ரூபாயை, 2026 ஜனவரியில் இருந்து, 6 சதவீதம் வட்டியுடன் மாணவிக்கு வழங்க வேண்டும்.
அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயை செலுத்தும்படி, கே.கே.ஆர்.டி.சி.,க்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
