UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:52 PM
பாகல்கோட்: மகனை கோடாரியால் வெட்டி கொலை செய்த தந்தைக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாகல்கோட் மாவட்டம், பீளகி தாலுகாவின், பிசனாளா கிராமத்தில் வசிப்பவர் டொங்கப்பா லக்கப்பா, 48. இவரது மகன் கரியப்பா, 21. கரியப்பா எந்த வேலைக்கும் செல்லாமல், வெட்டியாக பொழுது போக்கியுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு, மே 13ம் தேதி இரவு 9:30 மணியளவில், கரியப்பா உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் பணிக்கு செல்லாதது குறித்து, தந்தை டொங்கப்பா கேள்வி எழுப்பினார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் நடந்தது. அதன்பின் வீட்டு வெளிப்புற திண்ணையில் கரியப்பா உறங்கினார்.
அப்போது டொங்கப்பா, கோடாரியால் மகனை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். அவரை கைது செய்த பீளகி போலீசார், பாகல்கோட் முதன்மை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். டொங்கப்பாவுக்கு ஆயுள் தண்டனை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
