ஜி.பி.ஏ., தேர்தலுக்கு அவகாசம் 17ல் கோர்ட்டில் விசாரணை
ஜி.பி.ஏ., தேர்தலுக்கு அவகாசம் 17ல் கோர்ட்டில் விசாரணை
ADDED : ஜூலை 15, 2026 12:27 AM
பெங்களூரு: ஜி.பி.ஏ., தேர்தலை நடத்த வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த மனு வரும் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் செயல்படும் ஐந்து மாநகராட்சிகளுக்கான தேர்தலை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், கடந்த ஜூன் 30ம் தேதி எஸ்.ஐ.ஆர்., பணிகள் பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் துவங்கின. இப்பணிகளில் தேர்தல் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஜி.பி.ஏ., தேர்தலை நடத்துவதற்கு டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தது.
'பெங்களூரில் 1 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சி தேர்தலில் குறைந்தபட்சம் 60,000 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும்.தேர்தல் மற்றும் எஸ்.ஐ.ஆர்., பணிகளை ஒரே சமயத்தில் நடத்த முடியாது. எனவே, தேர்தலை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும்' என மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இம்மனு வரும் 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. மாநில அரசு தரப்பில், மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராக உள்ளார்.
