ADDED : மே 15, 2025 11:25 PM

பெங்களூரு: ''கிரேட்டர் பெங்களூரு ஆணையம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஆனால் தற்போதைக்கு மாநகராட்சி நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இல்லை,'' என்று, தலைமை கமிஷனர் மகேஸ்வர ராவ் கூறினார்.
பெங்களூரு மாநகராட்சிக்கு கடைசியாக கடந்த 2020ல் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் தற்போது வரை தேர்தல் நடத்த ஆட்சியில் இருந்த, பா.ஜ., -காங்கிரஸ் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
பா.ஜ., ஆட்சியின் போது மாநகராட்சிக்கு உட்பட்ட 198 வார்டுகள் எண்ணிக்கை 243 ஆக உயர்த்தப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், வார்டு எண்ணிக்கை 225 ஆனது. இதற்கிடையில் நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சியை 3 ஆக பிரிப்பதுடன், பெங்களூரு ரூரல் பகுதிகளையும், பெங்களூரு நகருடன் இணைக்கும் நோக்கில், 'கிரேட்டர் பெங்களூரு' உருவாக்க போவதாக, துணை முதல்வர் சிவகுமார் அறிவித்தார். இதற்கான முயற்சிகளும் நடந்தன.
விளக்கம்
இந்நிலையில் கடந்த மார்ச் 13ம் தேதி, கர்நாடக சட்டசபையில் 'கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதா - 2024' தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டது. இதனை கவர்னரின் ஒப்புதலுக்காக, மாநில அரசு அனுப்பியது. இதில் சில விளக்கங்கள் கேட்டு, கவர்னர் தாவர்சந்த் கெலாட், மசோதவை திருப்பி அனுப்பினார்.
அரசும் போதிய விளக்கம் அளித்ததால், ஏப்ரல் 24ம் தேதியன்று, மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அன்று மாலையே 'கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதா - 2024' அரசிதழில் வெளியிடப்பட்டது. கிரேட்டர் பெங்களூரு ஆணையம் மே 15 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''பெங்களூரு நேற்று முதல் கிரேட்டர் பெங்களூராக மாறும். கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைவராக முதல்வர் இருப்பார். ஆணையம் தொடர்பாக வரும் நாட்களில் பொருத்தமான முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
ஒரே குடை
ஏற்கனவே அறிவிக்கப்படி நேற்று முதல் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமலுக்கு வந்தது.
இதுபற்றி மாநகராட்சி தலைமை கமிஷனர் மகேஸ்வர ராவ் அளித்த பேட்டி:
கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்டம் இயற்றப்பட்டு 120 நாட்களுக்குள், முதல்வர் தலைமையில் ஆணையம் உருவாக்கப்படும். நகரின் எல்லை பகுதி குறிக்கப்படும். கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்.
பி.டி.ஏ., கமிஷனர், குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர், பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர், மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர், பெஸ்காம் நிர்வாக இயக்குனர், வருவாய் மாவட்ட துணை கமிஷனர்கள், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் உட்பட பல துறைகளின் அதிகாரிகள் உறுப்பினராக இருப்பர். மக்களுக்கு அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்க வேண்டும் என்பது கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் நோக்கம்.
ரோபோ பயன்பாடு
ஆணையம் முழுமையாக செயல்படும் வரை, மாநகராட்சி நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. வரி செலுத்துவது, அதிகார வரம்பில் எந்த மாற்றமும் இப்போதைக்கு இல்லை. ஆணையம் செயல்பாட்டுக்கு வந்த பின் ஒவ்வொரு அறிவிப்பாக வெளிவரும்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போது நகரில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நிரம்பி பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சாக்கடை கால்வாய்களை துார்வார ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்து உள்ளோம். கிரேட்டர் பெங்களூரு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முதல் திட்டமாக இது இருக்கும்.
சாக்கடை கால்வாயில் உள்ள வண்டல் மண்ணை ரோபோ உதவியுடன் அகற்றி, சீராக தண்ணீர் பாய்ந்து செல்ல வைப்பது எங்கள் நோக்கம். இதற்கான சில நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது. சோதனை அடிப்படையில் ரோபோக்களை பயன்படுத்த உள்ளோம். இது வெற்றி பெற்றால் நகர் முழுதும் விரிவுபடுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.