/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காலையில் திருமணம் முடித்த மாப்பிள்ளை இரவு தற்கொலை
/
காலையில் திருமணம் முடித்த மாப்பிள்ளை இரவு தற்கொலை
ADDED : ஜூலை 04, 2025 05:20 AM

கோலார்: காலையில் காதலியை பதிவுத்திருமணம் செய்த காதலன், வேலை செய்யும் மருத்துவமனையில் இரவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலார் மாவட்ட எஸ்.என்.ஆர்., மருத்துவமனையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தவர் ஹரீஷ் பாபு, 30. அதே மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் சிவரஞ்சனி, 28. இருவரும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவருமே கோலாரை சேர்ந்தவர்கள். இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால், சிவரஞ்சனியுடன் பேசுவதை ஓரிரு வாரமாக ஹரீஷ் பாபு தவிர்த்தார். தன்னை கைவிட்டுவிடுவாரோ என்ற சந்தேகம் சிவரஞ்சனிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹரீஷ் வீட்டுக்கே சிவரஞ்சனி சென்றுள்ளார். ஹரீஷ் தாயிடம் பேசியுள்ளார். 'ஹரீஷை திருமணம் செய்யாவிட்டால் இறந்து விடுவேன்' என கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் காலை தன் தாயை துணை பதிவாளர் அலுவலகத்துக்கு ஹரீஷ் அழைத்து வந்துள்ளார். அங்கு ஏற்கனவே சிவரஞ்சனியும் அவரது பெற்றோர், உறவினர்களும் இருந்தனர். இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. அதன்பின், தன் தாயை வீட்டுக்கு ஹரீஷ் அனுப்பி வைத்தார். மாலை வரை புது மனைவியான சிவரஞ்சனியுடன் இருந்துள்ளார்.
இரவு பணிக்கு செல்வதாக கூறிவிட்டு ஹரீஷ் சென்றார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர்கள், இ.என்.டி., அறைக்கு சென்றனர். அங்கு ஹரீஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முன்பு அவர் மது அருந்தியதும் தெரிந்தது.
தகவல் அறிந்து வந்த போலீசார், ஹரீஷ் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். பிளாக் மெயில் செய்து திருமணம் செய்ததால் ஹரீஷ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.