சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டிகள் கூட்ட நெரிசலை தடுக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு
சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டிகள் கூட்ட நெரிசலை தடுக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு
ADDED : மார் 25, 2026 06:51 AM
பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளின் போது கூட்டநெரிசல் ஏற்படாமல் இருப்பதை தடுக்க, போலீசார் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளனர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், கடந்த ஆண்டு நடந்த ஆர்.சி.பி., அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, பல மாதங்களுக்கு பின், வரும், 28ம் தேதி சின்னசாமியில் மீண்டும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. 19வது ஐ.பி.எல்., சீசனின் முதல் போட்டியே ஆர்.சி.பி., என்ற, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் - சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடக்க உள்ளது.
நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி., அணியின் முதல் ஆட்டத்தை பார்க்கவும், கோலியின் ஆட்டத்தை ரசிக்கவும், கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த போட்டியின் போது, கூட்டநெரிசல் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக, போலீசார் கடும் நடவடிக்கைகள் எடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக, பெங்களூரு கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிகாரப்பூர்வ ஆர்.சி.பி., இணையதளத்தில் மட்டுமே, கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். வேறு யாரிடமும் டிக்கெட் வாங்கக்கூடாது. போலி, அதிக விலைக்கு டிக்கெட் விற்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
டிக்கெட் வாங்கியவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்னதாக, மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு வர வேண்டும். கப்பன் சாலை, லிங்க் சாலை வழியாக மட்டுமே மைதானத்திற்குள் நுழைய அனுமதி. குயின்ஸ் சாலை வழியாக மைதானத்திற்குள் நுழைவதற்கு அனுமதி கிடையாது
பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு முன்பதிவு செய்திருக்க வேண்டும். சுதந்திர பூங்கா, கருடா மால், புனித வளனார் ஆண்கள் உயர்நிலை பள்ளி ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்
பார்வையாளர்கள் பஸ், மெட்ரோ ரயில் போன்ற, பொது போக்குவரத்தை உபயோகிப்பது சிறப்பு. டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்
மைதானத்தின் நுழைவு வாயில் பகுதிகளில், வாகனங்களை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. கியூ.ஆர்., குறியீடு இல்லாத டிக்கெட்டுகளும் செல்லுபடியாகாது
மைதானத்தை சுற்றி ஏ.ஐ., திறன் உடைய, 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒன்பது ஆம்புலன்சுகள் நிறுத்தப்படும். போலீசாரின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
போட்டி நடக்கும் நாட்களில், குயின்ஸ் சாலை, எம்.ஜி., ரோடு, அனில் கும்ப்ளே சதுக்கம், ராஜ்பவன் சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
