/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதிய தம்பதியின் உயிரை பறித்த குஜராத் சைபர் குற்றவாளி கைது
/
முதிய தம்பதியின் உயிரை பறித்த குஜராத் சைபர் குற்றவாளி கைது
முதிய தம்பதியின் உயிரை பறித்த குஜராத் சைபர் குற்றவாளி கைது
முதிய தம்பதியின் உயிரை பறித்த குஜராத் சைபர் குற்றவாளி கைது
ADDED : ஏப் 16, 2025 06:41 AM

பெலகாவி : முதிய தம்பதியின் உயிரை பறித்த சைபர் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
பெலகாவி, கானாபூர் தாலுகா பீடி கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதி டியாகோ நசரேத், 82, பிளாவியா, 79. இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியான நசரேத்தின் மொபைல் போனுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், சைபர் குற்றவாளி ஒருவர் தொடர்பு கொண்டார். அவர், தன்னை டில்லியில் பணிபுரியும் உயர் போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
அவர் கூறுகையில், 'உங்கள் மொபைல் எண்ணில் இருந்து ஆபாச படங்கள் பகிரப்பட்டு உள்ளது. மேலும், சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளீர்கள். இதனால், உங்களை கைது செய்ய உள்ளோம். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், 50 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும்' என கூறினார்.
இதனால், பயம் அடைந்த நசரேத், அவர் கூறிய வங்கி கணக்குக்கு 50 லட்சம் ரூபாய் பணம் அனுப்பினார். இருப்பினும், அந்நபர் மீண்டும் நசரேத்தை தொடர்பு கொண்டு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார்.
இதற்கு மேலும் பணம் அனுப்ப முடியாததால் நசரேத், தன் மனைவி பிளாவியாவுடன் சேர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சசம்பவம் பெலகாவியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நந்தகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். நசரேத் வங்கி கணக்கில் இருந்து, எந்த வங்கி கணக்குகளுக்கு எல்லாம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என விசாரித்தனர்.
அப்போது, ஐ.டி.எப்.சி., வங்கி கணக்கிற்கு, பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயருக்கு 6.10 லட்சம் ரூபாய் ஆன்லைனில் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். மொபைல் எண்ணை அடிப்படையாக கொண்டு விசாரித்ததில், அந்நபர் குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த சிராக் ஜீவராஜ்பாய் லக்கட், 26, என தெரியவந்தது.
இதன்படி, அந்நபரை பிடித்து விசாரித்ததில், அவர் குற்றத்தை ஒப்பு கொண்டார். இதன் பின், அவர் கைது செய்யப்பட்டார். தற்போது, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக எஸ்.பி., பீமாசங்கர் தெரிவித்து உள்ளார்.
மோசடி செய்யப்பட்டதில் 6 லட்சம் ரூபாய் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதி பணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.