/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சரவை மாற்றும் விவகாரத்தில் குஜராத் 'மாடல்' துணை முதல்வர் சிவகுமார் பிடிவாதம்
/
அமைச்சரவை மாற்றும் விவகாரத்தில் குஜராத் 'மாடல்' துணை முதல்வர் சிவகுமார் பிடிவாதம்
அமைச்சரவை மாற்றும் விவகாரத்தில் குஜராத் 'மாடல்' துணை முதல்வர் சிவகுமார் பிடிவாதம்
அமைச்சரவை மாற்றும் விவகாரத்தில் குஜராத் 'மாடல்' துணை முதல்வர் சிவகுமார் பிடிவாதம்
ADDED : நவ 08, 2025 11:06 PM

பெங்களூரு: 'குஜராத் மாநிலத்தை போன்று, கர்நாடகத்திலும் அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும்' என, துணை முதல்வர் சிவகுமார் பிடிவாதம் பிடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்த இம்மாதம் இரண்டாம் வாரம், டில்லிக்கு அவர் செல்வார் என்று தெரிகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்து, இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது. 'எனவே அமைச்சரவையை மாற்றி அமைத்து, எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என, பல எம்.எல்.ஏ.,க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன்பே, அமைச்சரவையை மாற்றியமைக்க காங்., மேலிடம் ஆர்வம் காட்டியது. ஆனால் இதற்கு முதல்வர் சித்தராமையா சம்மதிக்கவில்லை.
அமைச்சரவையை மாற்றி அமைத்தால், தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் பதவியிழக்க நேரிடும் என்று அவர் தயங்கினார். தற்போது அரசுக்கு இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் என, துணை முதல்வர் சிவகுமார் விரும்புகிறார்.
இதுகுறித்து ஆலோசிக்க டில்லிக்கு செல்ல தயாரானார். ஆனால் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரியங்கா உட்பட, பல தலைவர்கள் பீஹார் தேர்தலில் மும்முரமாக இருந்ததால், 'தற்போதைக்கு டில்லிக்கு வர வேண்டாம்' என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தினார். எனவே நவம்பர் 15ம் தேதிக்கு பின், டில்லிக்கு செல்ல, சிவகுமார் திட்டமிட்டுள்ளார்.
அமைச்சரவையை மாற்றி அமைக்கும் விஷயத்தில், குஜராத் மாநிலத்தை பின்பற்ற வேண்டும் என, கட்சி மேலிடத்திடம் ஏற்கனவே சிவகுமார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், தன் அமைச்சரவையில் இருந்த 16 அமைச்சர்களிடம் கடந்த மாதம் ராஜினாமா பெற்று, புதிய எம்.எல்.ஏ.,க்களை அமைச்சராக்கினார். முந்தைய ஆறு அமைச்சர்களை மட்டுமே, தக்கவைத்துக் கொண்டார்.
குஜராத்தில் பா.ஜ., தொடர்ந்து ஆட்சியில் அமர, இத்தகைய அதிரடி முடிவுகளே உதவியாக இருந்தன. அதே போன்று, 'கர்நாடகாவிலும் முதல்வர், துணை முதல்வரை தவிர மற்ற அமைச்சர்களிடம் ராஜினாமா பெற வேண்டும். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மூத்த அமைச்சர்களை கட்சி பணிக்கு பயன்படுத்த வேண்டும். அமைச்சரவைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். இது அடுத்த சட்டசபை தேர்தலில் கட்சிக்கு உதவியாக இருக்கும்' என்பது, சிவகுமாரின் எண்ணம்.
இதன் மூலம், முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அமைச்சர்களை நீக்க திரைமறைவில் முயற்சிப்பதாக அமைச்சர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டில்லி பயணத்தின்போது, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், கட்சியின் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் உட்பட, முக்கிய தலைவர்களை சந்தித்து, அமைச்சரவையை மாற்றி அமைக்க சிவகுமார் ஒப்புதல் பெறவுள்ளார். மேலிட தலைவர்களின் ஒப்புதல் கிடைத்தால், நவம்பர் 26க்குள், அமைச்சரவையை மாற்றி அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.

