/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'குட்டு' வெளிப்பட்டது!: பரப்பன அக்ரஹாரா சிறையில் செல்போன் பயன்பாடு வீடியோ: அரசுக்கு கடும் நெருக்கடி
/
'குட்டு' வெளிப்பட்டது!: பரப்பன அக்ரஹாரா சிறையில் செல்போன் பயன்பாடு வீடியோ: அரசுக்கு கடும் நெருக்கடி
'குட்டு' வெளிப்பட்டது!: பரப்பன அக்ரஹாரா சிறையில் செல்போன் பயன்பாடு வீடியோ: அரசுக்கு கடும் நெருக்கடி
'குட்டு' வெளிப்பட்டது!: பரப்பன அக்ரஹாரா சிறையில் செல்போன் பயன்பாடு வீடியோ: அரசுக்கு கடும் நெருக்கடி
UPDATED : நவ 09, 2025 01:18 AM
ADDED : நவ 08, 2025 11:07 PM

பரப்பன அக்ரஹாரா சிறையில் செல்போன் பயன்பாடு வீடியோ வெளியானதால் அரசுக்கு கடும் நெருக்கடி அதிரடி சோதனை நடத்த கூடுதல் டி.ஜி.பி., உத்தரவு
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஜுகாத் சகீல் மன்னா, பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய உமேஷ் ரெட்டி, தங்க கடத்தல் வழக்கில் கைதான தருண் உள்ளிட்ட பல கைதிகள் மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானதால், மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறையில் நடக்கும் 'குட்டு'ம் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், விசாரணை கைதிகள் என 4,800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரபல நடிகர் தர்ஷன், சிறைக்குள் பல மாதங்களுக்கு முன்பு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வீடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, சிறை அதிகாரிகளை கடுமையாக சாடிய நீதிபதிகள், சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி கிடைப்பதை தடுக்க உறுதி செய்ய வேண்டும் என கண்டித்தனர். ஆனால் இன்னும் சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பகிரங்கமாகி உள்ளது.
பயங்கரவாதி பிரபல ரவுடி குப்பாச்சி சீனா, சிறைக்குள் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ, கடந்த மாதம் வெளியாகி இருந்தது. சிறைக்குள் ஏராளமான கைதிகள், செல்போன் பயன்படுத்தும் வீடியோ நேற்று வெளியானது. இது மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக, 2022ல் கைது செய்யப்பட்ட திலக்நகரின் ஜுகாத் சகீல் மன்னா, பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமேஷ் ரெட்டி, துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் காதலன் தருண் கொண்டாரு ராஜு ஆகியோரின் கைகளில் மொபைல் போன் இருக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
விமர்சனம் ஜுகாத் சகீல் மன்னா சிரித்தபடியும், உமேஷ் ரெட்டி டிவி பார்த்தபடியும், தருண் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலும் அமர்ந்து ஹாயாக மொபைல் போன் பார்ப்பது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரவாத வழக்கில் கைதானவர் கையில் மொபைல் போன் கிடைக்கிறது என்றால், சிறையில் என்ன மாதிரியான பாதுகாப்பு வசதி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வீடியோ வேகமாக பரவும் நிலையில், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தங்கள் இஷ்டத்திற்கு சிறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். பணம் கொடுத்தால் சிறையில் எதற்கும் அனுமதி கொடுக்கின்றனர். உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் என்ன செய்கிறார் என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த, சிறை துறை கூடுதல் டி.ஜி.பி., தயானந்தா இதை எல்லாம் கண்டு கொள்வது இல்லையா என்றும், சமூக வலைதளங்களில் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றன.
சிறை ஊழியர்கள் இதையடுத்து, வீடியோவில் இருக்கும் கைதிகள் அறையில் அதிரடி சோதனை நடத்தவும், அதுதொடர்பாக விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சிறை அதிகாரிகளுக்கு தயானந்தா உத்தரவிட்டுள்ளார்.
சிறை ஊழியர்கள் உதவியுடன், கைதிகள் மொபைல் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ள நிலையில், இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்தியது பற்றி, என்னிடம் நிறைய தகவல் இல்லை. விசாரணைக்கு பின், அனைத்தையும் தெரிவிக்கிறேன்,'' என்றார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

