/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓராண்டு நிறைவடைந்தும் மந்தகதியில் 'குடா' பணிகள்
/
ஓராண்டு நிறைவடைந்தும் மந்தகதியில் 'குடா' பணிகள்
ADDED : ஜூலை 23, 2025 08:42 AM
தங்கவயல் : தங்கவயலில் உள்ள 'குடா' அமைப்பில் கடந்த ஓராண்டில் எந்த மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
தங்கவயல்,- பங்கார்பேட்டை ஆகிய இரு சட்டசபை தொகுதிகள் அடங்கிய 'குடா' எ னும் கே.ஜி.எப்., அர்பன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி என்ற தங்கவயல் மேம்பாட்டுக் குழுமம் உள்ளது. இதில் இரு தலைவர்கள் தலா இரண்டரை ஆண்டுகள் பதவி வகிப்பர்.
இந்த இரு தொ குதிகளிலும் வீடுகள் கட்டுவதற்கு, 'குடா'வின் அனுமதி அவசியம். இதற்குரிய கட்டணம் செலுத்தினால் மட்டுமே, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, நகராட்சியின் தடையில்லா சான்று பெற முடியும். முறையாக அனுமதி வழங்கினால், மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்; நிதி பற்றாக்குறை ஏற்படாது.
பத்து ஊழியர்கள் 'குடா'வுக்கென ஆணையர் ஒருவர், பொறியாளர், எழுத்தர், உதவியாளர், பில் கலெக்டர், கார் டிரைவர் என, பத்துக்கும் மேற்பட்டோர் இருக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக நான்கு பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். மற்ற ஆறு பேரும் தற்காலிக ஊழியர்கள் தான்.
இவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும் என்று சொல்ல முடியாது. இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் வழங்கப்படுவதாக கூறுகின்றனர்.
கோலார் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில், 'குடா' ஆணையர், தலைவர், இரு தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள், நகராட்சி உறுப்பினர் ஒருவர், தங்கச் சுரங்க அதிகாரி ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவர், பெஸ்காம் அதிகாரி ஆகியோர் உறுப்பினர்கள்.
மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் மூன்று மாதங்களாகியும் கூட்டம் நடக்கவில்லை. இதன் பட்ஜெட் விபரம் வெளிப்படையாக அறிவித்ததாக தெரியவில்லை.
இத்தகைய 'குடா'வின் தலைவர் பதவியில் அமர எப்போதுமே கடும் போட்டி நிலவும். தறபோதைய தலைவராக, பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் நெருக்கமான கோபால் ரெட்டி என்பவர் உள்ளார். இவர் பதவியேற்று ஓராண்டு நிறைவாகிறது. இவர் பதவிக் காலத்தில் இதுவரை என்ன பணிகள் நடந்துள்ளன என கேட்டால், பூஜ்யம் என்று தான் பதிலாக வரும்.
பாதாள சாக்கடை நகர பகுதிகளில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. சுரங்க குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை 'குடா' நிறைவேற்றியிருக்கலாம். ராபர்ட்சன்பேட்டையில் ராஜிவ் காந்தி லே - அவுட் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது. அதுவும் 20 ஆண்டுகளாகிவிட்டன.
மற்றப்படி நகர மேம்பாடு என்ற பெயரில் எந்த லே - அவுட்டும் உருவாக்கப்படவில்லை. பாரண்டஹள்ளியில் 'குடா'வின் இடம் என காலிமனைகளில் பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இந்த மனைகள், 20 ஆண்டுகளாக ஏலம் வி டப்படவில்லை.
பஸ் நிழற்குடைகள் அமைப்பு, பூங்காக்கள் சீரமைப்பு, மரக்கன்றுகள் நடுதல், சாலைகள், கால்வாய்கள் அமைப்பு, மின் விளக்குகள் பொருத்துதல் உட்பட நகர மேம்பாட்டுப் பணிகளை செய்ய வேண்டும்.
ஆனால், பணிகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. தங்கவயலுக்கு 'குடா' போன்று, பங்கார்பேட்டைக்கு 'புடா' என்ற அமைப்பு உருவாக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
தங்கவயலில் 976 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனுடன் தொழில் நகரமும் உருவாக உள்ளது. இதற்கு 'குடா'வின் அனுமதி மிக அவசியம். எனவே, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, பல நற்காரியங்களை 'குடா' செய்வதற்கு நல்ல நேரம் இது தான்.