கள்ளக்காதலி 'பிளாக்மெயில்' 'ஜிம்' பயிற்சியாளர் தற்கொலை
கள்ளக்காதலி 'பிளாக்மெயில்' 'ஜிம்' பயிற்சியாளர் தற்கொலை
ADDED : ஏப் 14, 2026 05:57 AM

நெலமங்களா: திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த, ஜிம் பயிற்சியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகா, வாஜரஹள்ளியில் வசித்தவர் திலீப், 28. ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு யோகிதா, 42, என்ற பெண் அறிமுகமானார். யோகிதாவுக்கு திருமணமாகி, கணவரும், ஒரு மகனும் உள்ளனர்.
திலீப் - யோகிதா இடையே ஏற்பட்ட அறிமுகம், நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. அவ்வப்போது யோகிதா, திலீப்பிடம் பணம் வாங்கியுள்ளார். இவர்களின் கள்ளத்தொடர்பு வெளியாகி, கணவர் முன்னிலையில் பஞ்சாயத்தும் நடந்தது. ஆனாலும், இவர்களின் தொடர்பு நீடித்தது.
ஒரு கட்டத்தில் திலீப்பை யோகிதா பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார். திலீப்பிற்கு சொந்தமான வீட்டை, தன் மகன் பெயருக்கு எழுதி தரும்படி நெருக்கடி கொடுத்தார். நேற்று முன் தினம் இரவு, யோகிதாவுக்கு போன் செய்து பேசிய திலீப், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்டு பீதியடைந்த யோகிதா, இன்ஸ்டாகிராம் மூலமாக, திலீப்பின் சகோதரருக்கு தகவல் அனுப்பி, 'உன் சகோதரர் அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போய் பாருங்கள்' என்று, கூறியுள்ளார்.
அதன்பின் சகோதரர் அறை கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, திலீப் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதற்கு யோகிதாவின் பிளாக்மெயிலே காரணம் என, நெலமங்களா போலீஸ் நிலையத்தில், திலீப் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.
