/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பவானி ஜாமின் நிபந்தனையில் தளர்வு ஹாசன், மைசூரு செல்ல தடை நீக்கம்
/
பவானி ஜாமின் நிபந்தனையில் தளர்வு ஹாசன், மைசூரு செல்ல தடை நீக்கம்
பவானி ஜாமின் நிபந்தனையில் தளர்வு ஹாசன், மைசூரு செல்ல தடை நீக்கம்
பவானி ஜாமின் நிபந்தனையில் தளர்வு ஹாசன், மைசூரு செல்ல தடை நீக்கம்
ADDED : ஏப் 05, 2025 07:47 AM

பெங்களூரு : பெண் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் பெற்ற பவானிக்கு, ஹாசன், மைசூரு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை, கர்நாடக உயர் நீதிமன்றம், நிபந்தனையுடன் தளர்வு செய்துள்ளது.
ஹாசனில் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, தன் வீட்டு வேலைக்கார பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இவ்வழக்கில் அப்பெண்ணை கடத்தியதாக, பிரஜ்வலின் தாயார் பவானி மீது வழக்கு பதிவானது.
இவ்வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க, ஹாசன், மைசூரு செல்லக்கூடாது என்று நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் பெற்றார். அதன்பின், தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை நீக்க கோரி, பவானி சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதி பிரதீப் சிங் யெரூர் முன் விசாரணைக்கு வந்தது.
பவானி தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:
மீறவில்லை
பெண்ணை கடத்தியதாக என் மனுதாரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு ஆறு மாதங்களுக்கு முன் வழங்கிய முன்ஜாமின் மனுவில் குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளை மீறவில்லை.
இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற ஆறு பேர், எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முதல் குற்றம்சாட்டப்பட்ட ரேவண்ணா மட்டும், கே.ஆர்., நகர் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
ஹாசனில் சுவாமி தரிசனம் செய்ய அளிக்கப்பட்ட பத்து நாள் நிபந்தனையிலும், பவானி எந்த விதிமீறலும் செய்யவில்லை. அவர் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை. எனவே, அவருக்கு ஜாமினில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்த வேண்டும்.
இவ்வாறு வாதிட்டார்.
எதிர்ப்பு
அரசு தரப்பு சிறப்பு வக்கீல் ரவிவர்ம குமார் வாதிட்டதாவது:
கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி பவானி தான். பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேற காரணமாக இருந்தவரும் அவர் தான். அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்கும் வரை அவர் தலைமறைவாக இருந்தார்.
இதுவரை, அவரின் மொபைல் போனை, விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை.
மேலும், ஒன்பதாவது குற்றவாளியான பவானியின் கார் ஓட்டுநரும் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, பவானிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த கூடாது.
இவ்வாறு வாதிட்டார்.
நீதிபதி பிரதீப் சிங் யெரூர் கூறுகையில், ''பவானிக்கு வழங்கப்பட்ட முன் ஜாமினில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் தளர்த்தப்படுகின்றன.
''அதேவேளையில், பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் வீடுகளில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் அவர் செல்லக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால், விசாரணை அதிகாரிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, ஜாமினை ரத்து செய்யலாம்,'' என்றார்.