/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரே சிலையில் 3 யுகங்களின் ஹனுமன்
/
ஒரே சிலையில் 3 யுகங்களின் ஹனுமன்
ADDED : ஜூலை 29, 2025 01:44 AM

மூன்று யுகங்களின் அவதாரமாக ஒரே கல்லில் தோன்றிய ஹனுமனை பார்க்க வேண்டுமெனில், நீங்கள் மாண்டியா மாவட்டம் மத்துாரில் சிம்சா நதிக்கரை அருகில் உள்ள ஹொலே ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும்.
ஸ்தல புராணம் அடங்கிய பனை ஓலையை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், மத்துார் அர்ஜுனபுரி என்றும், கதம்ப ஷேத்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இங்குள்ள உக்ரநரசிம்ம கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று, கி.பி., 1150 என தேதியிட்டு உள்ளது. வெளிப்புற நுழை வாயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டு, 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது.
கல்வெட்டுகளில் மத்துார், மருதுார் என்றும், நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மூலம் மத்துார் என்ற பெயர் மரதுார் அல்லது மத்துாரம்மா என்ற பெயரில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
அமைதியான, பசுமையான சூழலில் அமைந்து உள்ள இக்கோவிலில், 600 ஆண்டுகளுக்கு முன், தற்போதைய ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலை, ஸ்ரீபாதராஜர், ஸ்ரீ வியாசராஜர் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
விஜயநகர பேரரசரின் வம்சாவளி ஆட்சியில், 732 ஆஞ்சநேயர் சிலைகளை பிரதிஷ்டை செய்த ஸ்ரீ வியாசதீதரின் வழிகாட்டுதலின் கீழ் இக்கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இச்சிலை 6 முதல் 7 அடி உயரம் கொண்டதாகும்.
இங்குள்ள ஆஞ்சநேயர் ஜாக்ருதவஸ்தம் எனும் கண்கள் விழித்திருக்கும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு சிறப்பு, திரேத யுகத்தில் பகவான் ஸ்ரீராமரின் சேவகராக ஹனுமனாகவும்; துவார யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் சேவகராக பீமராகவும்; கலியுகத்தில் ஸ்ரீமத்வாச்சாரியாராகவும் இருந்ததை அடையாளப்படுத்தும் வகையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியினர் கூறுகையில், 'கடந்த 10 - 12 ஆண்டுகளில், ஆஞ்சநேயரின் முகம் அரை அங்குலம் அளவு அதிகரித்துள்ளது. 2004 ஸ்ரீராம நவமியின்போது, இரவு நேரத்தில் கோவில் கதவுகள் மூடப்பட்ட பின், மணிகள், சங்கு, மேளம் சத்தம் கேட்டன. அதுபோன்று 2011ல் சந்திர கிரகணத்தின் போதும், மூடப்பட்ட கோவிலுக்குள் இருந்து அதேபோன்று சத்தம் கேட்டன' என்றனர்.
காணிக்கையுடன் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் சேர்ந்து, கோவிலை ஐந்து செவ்வாய்க்கிழமை தோறும், ஐந்து முறை அங்கபிரதட்சணம் செய்தால், உங்கள் விருப்பம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
திருமணம், நீதிமன்ற வழக்குகள், வேலைகள், குழந்தை பாக்கியம் போன்ற கடுமையான தடைகள் இருந்தாலும், இங்கு வந்து வேண்டியவர்கள் பலனடைந்து உள்ளனர்.
- நமது நிருபர் -