/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மீசையுடன் காட்சியளிக்கும் ஹனுமன்
/
மீசையுடன் காட்சியளிக்கும் ஹனுமன்
ADDED : நவ 04, 2025 04:45 AM

கலபுரகி மாவட்டம், ஜுவர்கியின் ரசங்கி கிராமத்தில் அமைந்து உள்ளது ரசங்கி ஹனுமன் கோவில். இதை பாலபீமா கோவில் என்றும் அழைக்கின்றனர்.
ஸ்தல புராணப்படி, பல நுாறு ஆண்டுகளுக்கு முன், இக்கிராமத்தை சேர்ந்த சில பெண்கள், பீமா ஆற்றில் துணிகளை துவைக்க சென்றனர். அப்போது ஒரு பெண்ணுக்கு மட்டும், யாரோ ஒருவர் அழும் குரல் கேட்டது. அருகில் இருந்த பெண்ணிடம், யாரோ அழுகின்றனர் என்று கூறியுள்ளார். அதற்கு அருகில் இருந்த பெண், 'எனக்கு எதுவும் கேட்கவில்லை' என்றார்.
மீண்டும் துணி துவைக்கும் போது, ஆண் அழும் குரல் கேட்டது. பயந்துபோன அப்பெண், தனது கணவரிடம் தெரிவித்தார். கணவரும், பீமா நதிக்கு வந்த போது, நபர் ஒருவர் அழும் குரல் அவருக்கும் கேட்டது. ஆனால், மற்றவர்களுக்கு கேட்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து கிராமத்தின் தலைவர்களிடம் தெரிவித்தனர். அன்றிரவு கிராம தலைவர்களின் ஒருவர் கனவில் தோன்றிய ஹனுமன், பீமா ஆற்றில் உள்ள கல்லில் தோன்றி உள்ளேன். அதை கிராமத்திற்குள் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து, கோவில் கட்டி வணங்கும்படி கூறிவிட்டு மறைந்தார்.
இதையடுத்து மறுநாள் காலை ஆற்றில் இருந்த கல்லை எடுத்த போது, பீமனை போன்று மீசையுடன் ஹனுமன் விக்ரஹம் செதுக்கப்பட்டிருந்தது. அந்த கல், கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, வேதங்கள், பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஹனுமனுக்கு கோவில் கட்டி, இன்று வரை தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. இன்று வரையும் நம்மை ஹனுமன் காப்பாற்றி வருவதாகவும், இரவு நேரத்தில் கிராமத்தை ஹனுமன் வலம் வருவதாகவும் நம்புகின்றனர்.
- நமது நிருபர் -

