ADDED : நவ 04, 2025 04:46 AM

ஹாசன் மாவட்டம், நவிலே கிராமத்தில் ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் 900 ஆண்டுகள் பழமையானது. விஜயநகர பேரரசு உட்பட பல ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளது. காலப்போக்கில் உருமாறி உள்ளது.
இந்த கோவில் பாரம்பரிய தென்னிந்திய கட்டடக் கலையை பிரதிபலிக்கிறது. கோவில் நுழைவு வாயிலில் சிறிய கோபுரம் உள்ளது. கருவறைக்கு செல்லும் முன், கல் மண்டபம் உள்ளது. கருவறையின் உட்புறச் சுவர்களில் நாகதேவதை சிற்பங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இங்கு விநாயகர், பார்வதி தேவிக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
நம்பிக்கை இந்த கோவிலின் மூலவராக நாகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். நாகேஸ்வரர், சிவலிங்க வடிவில் உள்ளார். இந்த லிங்கம் சுயம்புவாக தோன்றி உள்ளது. இவர் பாம்புகளுடன் தொடர்புடையவர். நாகேஸ்வரரை மனமுருக வேண்டினால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை.
இதற்காக பல மைல் துாரத்திலிருந்து பக்தர்கள் வருகை தருவதை பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, மலைவாழ் பகுதியில் இருப்பவர்களும், பாம்புகளை தெய்வமாக வழிபடக்கூடியவர்களும், இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
நேர்த்திக்கடன் இந்த கோவில் அமைந்துள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் நாகதோஷத்தால் அவதிப்பட்ட முனிவர், சிவபெருமானிடம் தோஷம் நீங்க பிரார்த்தனை செய்தார். அவரின் பிரார்த்தணையை கேட்ட சிவபெருமான், முனிவர் முன் தோன்றி, தோஷத்தை நீக்கினார். அந்த இடத்திலேயே இந்த கோவில் அமைந்தது.
இங்கு வரும் பக்தர்களுக்கு நாக தோஷம் மட்டுமின்றி குழந்தை இல்லாதவர்கள், திருமணம் தாமதம் போன்றவை தீர வேண்டுகின்றனர். இந்த வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை கோவிலுக்கு வந்து செலுத்துவதை நம்மால் பார்க்க முடியும்.
இந்த கோவிலில் 'மஹாசிவராத்திரி' விசேஷமாக கொண்டாடப்படும். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமை, பிரதோஷங்களின் போதும் சிறப்பு பூஜைகள், அலங்காரம் சிவபெருமானுக்கு செய்யப்படும். இக்கோவில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்
- நமது நிருபர் - .

