/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துளுநாட்டில் பரசுராமருக்கு பிரத்யேக கோவில்
/
துளுநாட்டில் பரசுராமருக்கு பிரத்யேக கோவில்
ADDED : நவ 04, 2025 04:47 AM

ஹிந்து மத கடவுள்களில் ஒருவரான பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரம், அனந்தேஸ்வர பரசுராமர். இவர் பூமியில் தீய சக்திகள் தலை துாக்கும் போது, அதன் ஆட்டத்தை அடியோடு அழிப்பதற்காகபூமியில் உருவெடுத்தார்.
இவர், மஹாபாரதத்தில் கொடை வள்ளல் கர்ணனுக்கு குருவாக திவ்ய வித்தைகளை கற்றுக்கொடுத்தவர். இப்படிப்பட்ட பரசுராமருக்கு என பிரத்யேகமாக கோவில்கள் இருப்பது என்பது அரிது.
இப்படிப்பட்ட அரிதான விஷயத்தை நீங்களும் அறிய, உடுப்பி மாவட்டத்தின் தேங்பேட் பகுதிக்கு செல்ல வேண்டும்.
ஆம்... அங்கு தான் ஸ்ரீ அனந்தேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவில்7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ளது. இது துளு நாட்டில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாக இன்றும் காட்சி அளிக்கிறது.
இந்த கோவிலின் மூலவராக விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவில் ஆன்மிகம், வரலாறு, புராணம் ஆகியவற்றுக்கு உதாரணமாக இருக்கிறது.இந்த புனித தலத்தில் தான் ஹிந்து மத போதகரான மத்வாச்சாரியார் வந்து வழிபட்டு சென்று உள்ளார். இது அவரது ஆன்மிக பயணத்தின் திருப்பு முனையாக அமைந்து உள்ளதாக அவரே குறிப்பிட்டு உள்ளார்.
இந்த கோவிலின் கட்டுமானம், தென்னிந்திய பாரம்பரிய கட்டட கலையை பிரதிபலிக்கிறது. இது, சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள், விசாலமான மண்டபங்களுடன் காட்சி அளிக்கின்றன.
கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை லட்ச தீப உத்சவம் நடக்கும். அப்போது, ஒரு லட்சம் விளக்குகள் கோவிலில் ஏற்றப்படும்.இது கண்கவர் காட்சியாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி, சங்கராந்தி, சிவராத்திரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த கோவிலுக்கு வந்து பரசுராமரை, மாணவர்கள் வழிபடுவதன் மூலம் படிப்பு, நேர்மை, சக்தி ஆகியவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவில் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். கோவிலுக்கு அருகில் ஸ்ரீ கிருஷ்ண மடம், சந்திரமவுலீஸ்வரர் கோவில் ஆகியவை இருக்கின்றன.
எப்படி செல்வது? பஸ்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் உடுப்பி பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து ஆட்டோ அல்லது டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.
ரயில்: பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் உடுப்பி ரயில் நிலையத்தை அடையலாம். அங்கிருந்துடாக்சி மூலம் கோவிலை அடையலாம்.
- நமது நிருபர் -

