ஹரிபிரசாத், சதீஷ் ரகசிய பேச்சு கர்நாடக காங்கிரசில் சலசலப்பு
ஹரிபிரசாத், சதீஷ் ரகசிய பேச்சு கர்நாடக காங்கிரசில் சலசலப்பு
UPDATED : நவ 24, 2026 12:00 AM
ADDED : நவ 23, 2026 07:56 PM
பெங்களூரு: பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியும், மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத்தும் விமான நிலையத்தில் ரகசிய பேச்சு நடத்தியது, காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தட்சிண கன்னடா மாவட்டம், புத்துாரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக் ராய் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத், விமானத்தில் நேற்று முன்தினம் மங்களூரு சென்றார்.
இதே வேளையில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தன் சொந்த ஹெலிகாப்டரில் அங்கு வந்தார். இருவரும் அங்கு சந்தித்துக் கொண்டனர்.
விமான நிலையத்தின் உட்புறம் இரண்டு தலைவர்களும் சிறிது நேரம் ரகசிய பேச்சு நடத்தினர். அதன்பின் ஹரிபிரசாத் புத்துாருக்கு புறப்பட்டார். அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவில்லை. அங்கிருந்தே பெங்களூருக்கு திரும்பினார்.
இவர் ஹரிபிரசாத்தை சந்திப்பதற்காக மங்களூரு வந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
ஹரிபிரசாத், சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு குறித்து, உள்ளூர் கட்சி தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருவரும் எதைப் பற்றி பேச்சு நடத்தினர் என்பதை பகிரங்கப்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
