‘ஹாசனாம்பா கோவில் திருவிழா வி.ஐ.பி., தரிசன நேரம் அறிவிப்பு’
‘ஹாசனாம்பா கோவில் திருவிழா வி.ஐ.பி., தரிசன நேரம் அறிவிப்பு’
UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 07:24 PM
பெங்களூரு: ‘‘ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, தரிசனம் தரும் ஹாசனாம்பா கோவில் திருவிழாவுக்கு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது.
வி.வி.ஐ.பி., மற்றும் பொதுமக்களின் தரிசனத்துக்கு, தனித்தனி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என, அமைச்சர் சிவலிங்கேகவுடா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அக்டோபர் 29 முதல், நவம்பர் 11 வரை ஹாசனாம்பா கோவில் திருவிழா நடக்கவுள்ளது. ஹாசனாம்பா தரிசனத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
கோவில் திருவிழாவுக்கு வருமாறு, முதல்வர் சிவகுமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பு விடுத்த போது, ஹாசன் எம்.பி., ஷ்ரேயஸ் படேல், மாவட்ட கலெக்டர் லதாகுமாரி, எஸ்.பி., ஷுபன்விதாவுடன், நானும் இருந்தேன்.
துணை முதல்வர், அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்தோம். கடந்தாண்டு ஹாசனாம்பாவை தரிசிக்க, 25 லட்சம் பேர் வருகை தந்தனர். இம்முறை அந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
வி.வி.ஐ.பி., மற்றும் பொதுமக்களின் தரிசனத்துக்கு, தனித்தனி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 10:00 மணி முதல், மதியம் 12:30 மணி வரை மட்டுமே, வி.வி.ஐ.பி.,க்கள் தரிசனத்துக்கு வாய்ப்பு இருக்கும். மற்ற நேரத்தில் பொது மக்கள் தரிசிக்கலாம்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், வி.வி.ஐ.பி.,க்கள் வராவிட்டால், மறு நாள் வர வேண்டும்.
மைசூரு தசராவில் பூஜைக்கு வந்த மூன்று அமைச்சர்களை, எஸ்.பி., தடுத்த விஷயத்தில், என்ன நடந்தது என, எங்களுக்கு தெரியவில்லை. அமைச்சர்களை அனுமதிக்காதது தவறு தான். ஹாசனாம்பா திருவிழாவில் இது போன்று நடக்க விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
