/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெறுப்பு பேச்சுக்களை தடை செய்யும் மசோதா - 2025 நிறைவேற்றம்!
/
வெறுப்பு பேச்சுக்களை தடை செய்யும் மசோதா - 2025 நிறைவேற்றம்!
வெறுப்பு பேச்சுக்களை தடை செய்யும் மசோதா - 2025 நிறைவேற்றம்!
வெறுப்பு பேச்சுக்களை தடை செய்யும் மசோதா - 2025 நிறைவேற்றம்!
ADDED : டிச 19, 2025 05:12 AM

கர்நாடகாவில் கல்வியில் சிறந்த மாவட்டம் என்று பெயர் எடுத்த, தட்சிண கன்னடாவின் உடுப்பியில், அவ்வப்போது வகுப்புவாத மோதல்கள் நடக்கின்றன. இந்த மோதல் எதிரொலியாக இரு சமூகங்களை சேர்ந்தவர்கள் மாறி, மாறி கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதற்கு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும், வெறுப்பு பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களே காரணம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், இரு சமூகங்களுக்கு இடையே மோதலை துாண்டும் வகையில் பேசுவோர் மீது, அரசு நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
கைவிட வேண்டும்
இந்நிலையில், வெறுப்பு பேச்சுக்களை தடை செய்யும் மசோதா - 2025ஐ, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கடந்த, 10ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். வெறுப்பு பேச்சு பேசுவோருக்கு அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் விதிமுறை இந்த மசோதாவில் உள்ளது. இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மசோதா மீது சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தது.
எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், ''வெறுப்பு தடுப்பு என்ற வார்த்தையை, இதுவரை நான் எந்த அகராதியிலும் பார்த்தது இல்லை. இந்த அரசு ஒரு சமூகத்தின் மீது வெறுப்பு பேச்சு தடுப்பு சட்டத்தை பயன்படுத்தினால், அடுத்த அரசு அதை மற்றொரு சமூகம் மீது பயன்படுத்தும். இந்த மசோதாவால், எந்த நன்மையும் ஏற்படாது. மசோதாவை கைவிட வேண்டும்,'' என்றார்.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும் பேசினர்.
தீ வைக்கும் வேலை அப்போது குறுக்கிட்ட நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ், ''கடற்கரை மாவட்டங்களில் தீ வைத்தவர்கள், இங்கு வந்து தீவைக்கும் வேலையை செய்யக்கூடாது,'' என்றார். இது, பா.ஜ., உறுப்பினர்களை கோபம டையச் செய்தது. பைரதி சுரேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூச்சல் போட்டனர். அமைச்சருக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் குரல் எழுப்பியதால், சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. யார் என்ன பேசுகின்றனர் என்பதே தெரியாத சூழல் நிலவியது.
அசோக் தொடர்ந்து பேசுகையில், ''கடலோர மாவட்ட எம்.எல்.ஏ.,க்களை தீ வைப்பவர்கள் என்று கூறியதன் மூலம், அப்பகுதி மக்களை, அமைச்சர் பைரதி சுரேஷ் அவமதித்து விட்டார். அவர் மீது முதலில் வெறுப்பு பேச்சு தடை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
சபாநாயகர் காதரும், தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், பைரதி சுரேஷ் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்தார். அவர் பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.
இருக்கை முற்றுகை ஆனாலும், இதனை ஏற்காத பா.ஜ., உறுப்பினர்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து வந்தனர். சபாநாயகர் இருக்கை முன் போராட்டம் நடத்தினர். இந்த நேரத்தில் அசோக், மசோதாவின் நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின், அசோக் மீண்டும் பேசுகையில், ''இந்த மசோதா அரசியலமைப்பு பிரிவு 19(1) ஐ மீறுவது தெளிவாக தெரிகிறது. கருத்து சுதந்திரத்தின் மீது அத்துமீறல் நடக்கிறது. ஊடகங்கள் கூட இந்த மசோதாவை விரும்பவில்லை. மீண்டும் அவசரகால நிலையை அறிவிக்க முயற்சி நடக்கிறது,'' என்றார்.
தோற்கடிக்க திட்டம் இந்த பரபரப்புக்கு மத்தியில் ம சோதா மீது உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேசுகையில், ''சமீபகாலமாக சிலர் ஒரு சமூகத்தை புண்படுத்தும் வகையில், வெறுப்பு பேச்சு பேசுகின்றனர். இதனால், கொலைகள் நடந்து உள்ளன. சமூக ஆரோக்கியம் மோசமாக உள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். எனவே, மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளோம். அனைவரும் ஆதரிக்க வேண்டும்,'' என்றார்.
அதனை ஏற்காமல் பா.ஜ., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்ப்புக்கு மத்தியிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவுடன், மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று மேல்சபையிலும், மசோதா மீது உறுப்பினர்கள் விவாதம் நடக்க உள்ளது. மேல்சபையில் காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாததால், இங்கு மசோதாவை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும், பா.ஜ., மேற்கொண்டு வருகிறது.
மசோதா நகலை கிழித்து எறிந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக்.

