/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லால்பாக்கில் சுரங்கப்பாதைக்கு எதிரான மனு அரசு, ஜி.பி.ஏ.,வுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
/
லால்பாக்கில் சுரங்கப்பாதைக்கு எதிரான மனு அரசு, ஜி.பி.ஏ.,வுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
லால்பாக்கில் சுரங்கப்பாதைக்கு எதிரான மனு அரசு, ஜி.பி.ஏ.,வுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
லால்பாக்கில் சுரங்கப்பாதைக்கு எதிரான மனு அரசு, ஜி.பி.ஏ.,வுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
ADDED : அக் 25, 2025 11:03 PM
பெங்களூரு: பெங்களூரு லால்பாக்கில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விளக்கம் அளிக்கும்படி, மாநில அரசுக்கும், ஜி.பி.ஏ.,வுக்கும் மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஹெப்பாலில் இருந்து சில்க் போர்டு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் 'டெண்டர்' அழைத்திருந்தது.
இந்த டெண்டருக்கு எதிராக, திரைப்பட நடிகர் பிரகாஷ் பெலவாடி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பெங்களூரு ஹெப்பாலில் இருந்து சில்க் போர்டு சந்திப்பு வரை, 19,000 கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாதை அமைக்க, ஜி.பி.ஏ., திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு டெண்டரும் அழைக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தினால், லால்பாக் பூங்காவில் உள்ள 3,000 ஆண்டுகள் பழமையான பாறை, ஹெப்பாலில் இருந்து நாகவாரா ஏரிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள், நுாற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள், இணையதளம் சேவை பாதிக்கப்படும்.
இத்திட்டத்தில், ஒரு கி.மீ., துாரத்துக்கு 1,000 கோடி ரூபாய் செலவழிக்கப்படும். ஆனால், இரு சக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் செல்ல அனுமதி இல்லையாம். இது வாகனங்கள் இடையே சமத்துவமின்மையை உருவாக்கும். இது அரசியல் அமைப்பின் 14வது பிரிவை மீறுவதாகும்.
எனவே, இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும், சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக, அரசு எடுத்த முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல் தேஜஸ்வி சூர்யா வாதிட்டதாவது:
சுரங்கப்பாதை திட்டத்துக்காக, பெங்களூரு நகரின் நுரையீலாக கருதப்படும் லால்பாக்கில், 6.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்த, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பொது மக்கள் நடைப்பயிற்சி செல்ல, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவிர, சுரங்கப்பாதைக்கான திட்ட அறிக்கையில், லால்பாக்கில் 3,000 ஆண்டுகளாக இயற்கையாக உருவான பாறை உள்ளது. இது தேசிய புவியியல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் பாறை சேதம் அடையும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அதே வேளையில், மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி, டாக்டர் ஆதிகேசவலு உட்பட சிலர் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், 'இத்திட்டத்துக்கு பயன்படுத்த, லால்பாக்கில், ஆறு ஏக்கர் நிலம், அடையாளம் காணப்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூரில் உள்ள பல மரங்கள் ஆபத்தில் உள்ளன. இதை வெட்ட அவர்கள் திட்டமிட்டது ஏன் என்று தெரியவில்லை. எனவே, நீதிமன்ற அனுமதியின்றி, மரங்களை வெட்டக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தலைமை நீதிபதி விபு பக்ரு: இம்மனு மீது விசாரணை நடத்த வேண்டும். அதே வேளையில், லால்பாக்கில் மரங்களை வெட்டுவது தொடர்பாக, திட்டம் ஏதாவது உள்ளதா?
அரசு வக்கீல்: அவ்வாறு எந்த திட்டமும் இல்லை. இது தொடர்பாக அட்வகேட் ஜெனரல் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
தலைமை நீதிபதி: மதியத்துக்குள் எத்தனை மரங்கள் வெட்டப்படும் என்ற தகவல் தெரிவிக்க வேண்டும்.
அரசு வக்கீல்: நான்காவது சனிக்கிழமை என்பதால், அதிகாரிகள் அனைவரும் விடுமுறையில் இருப்பர். எனவே, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்.
தலைமை நீதிபதி: பெங்களூரில் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக, மாநில அரசுக்கும், ஜி.பி.ஏ.,வுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வழக்கு விசாரணை, அக்., 28ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.

