நடிகர் தன்வீர் கவுடா மீதான வழக்கு தள்ளுபடி செய்ய ஐகோர்ட் மறுப்பு
நடிகர் தன்வீர் கவுடா மீதான வழக்கு தள்ளுபடி செய்ய ஐகோர்ட் மறுப்பு
UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 08:54 PM

பெங்களூரு: நடிகர் தன்வீர் கவுடா மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய, கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்து, விசாரணையை தொடர உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி, அவரின் மேலாளர் நாகராஜ் ஆகியோரை மொபைல் போனில் அவதுாறாக பேசியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும், தன்வீர் கவுடா மீது ஆர்.ஆர்., நகர் போலீஸ் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதுபோல, தன்வீர் கவுடா தந்தையும், எதிர்தரப்பினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்தாக, அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் குறித்து, ஆர்.ஆர்.,நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், தன் மீது பதிவாகி உள்ள இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் தன்வீர் கவுடா மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதி ஆனந்த் ராம்நாத் ஹெக்டே முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
தன்வீர் கவுடா தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'புகார்தாரர், தன்வீரின் வீட்டுக்குள் நுழைந்து, அவரது தந்தையை திட்டியுள்ளனர். இருப்பினும், விஜயலட்சுமியை தன்வீர் திட்டவில்லை. எனவே, மனுதாரர் தன்வீர் மீது தவறுதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
அரசு தரப்பு வக்கீல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'நாகராஜுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுத்ததற்கான ஆதாரம் உள்ளது. எனவே, தன்வீரின் மனு வை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ராம்நாத் ஹெக்டே, ''வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே வேளையில், விசாரணைக்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, விசாரணையை தொடரலாம்,'' என, உத்தரவிட்டார்.
