ADDED : செப் 05, 2025 11:12 PM

ஓட்ஸ் மற்றும் உளுந்து இரண்டுமே, உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கின்றன. இவற்றில் ஏராளமான புரத சத்துகள் உள்ளன. இட்லி, தோசை, உப்புமா என பல விதமான சிற்றுண்டிகள் தயாரிக்கலாம். எப்போதும் ஒரே விதமான தோசை சாப்பிடுவதற்கு பதில் ஓட்ஸ், உளுந்து செட் தோசை செய்து சாப்பிடுங்களேன்.
செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மைசூரு பருப்பு, பாசிப்பருப்பு, அவல், வெந்தயம் போட்டு இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவி தேவையான நீர் ஊற்றி, நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
வேறு ஒரு கிண்ணத்தில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் ஓட்ஸை ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்த ஓட்ஸை மிக்சியில் போட்டு அரைத்து, ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். அதன்பின் ஊற வைத்த பருப்புகளை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். இந்த மாவுடன், ஓட்ஸ் மாவை சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ளவும். இந்த மாவை எட்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
அதன்பின் மாவை தேவையான அளவில் கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். மிச்ச மாவை பிரிஜில் வைக்கவும். கிண்ணத்தில் வைத்துள்ள மாவில், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து, காய்ந்ததும் எண்ணெய் தடவவும். அதன் மீது செட் தோசை போன்று ஊற்றவும். இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்தால், ஓட்ஸ், உளுந்து செட் தோசை தயார். காலை சிற்றுண்டிக்கு ஏற்றது.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது பொடி நல்லெண்ணெய் பொருத்தமாக இருக்கும். இது மிகவும் சத்தானது. குழந்தைகளுக்கு அவ்வப்போது செய்து கொடுப்பது நல்லது.
- நமது நிருபர் -