/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கனமழையால் பெலகாவி - கோவா போக்குவரத்து துண்டிப்பு!: மங்களூரு, கார்வார், சிக்கமகளூரில் நிலச்சரிவு
/
கனமழையால் பெலகாவி - கோவா போக்குவரத்து துண்டிப்பு!: மங்களூரு, கார்வார், சிக்கமகளூரில் நிலச்சரிவு
கனமழையால் பெலகாவி - கோவா போக்குவரத்து துண்டிப்பு!: மங்களூரு, கார்வார், சிக்கமகளூரில் நிலச்சரிவு
கனமழையால் பெலகாவி - கோவா போக்குவரத்து துண்டிப்பு!: மங்களூரு, கார்வார், சிக்கமகளூரில் நிலச்சரிவு
ADDED : ஜூன் 15, 2025 11:17 PM

கர்நாடகாவிலும், அண்டை மாநிலங்களான கேரளா, மஹாராஷ்டிராவிலும் தென்மேற்கு பருவமழை, தீவிரம் அடைந்து உள்ளது. கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் இருக்கும் பெலகாவியில் கடந்த இரண்டு நாட்களாக, கனமழை பெய்து வருகிறது.
பெலகாவியில் உள்ள வேதகங்கா, துாத்கங்கா, மல்லபிரபா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பெலகாவியின் கானாபுராவில் இருந்து சோர்லா வனப்பகுதி வழியாக, கோவாவுக்கு சாலை செல்கிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெலகாவி - கோவா இடையில் சென்று வருகின்றன.
புதிய பாலம்
தற்போது அந்த சாலையில் குசமலி என்ற இடத்தில், புதிதாக பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் பாலம் வேலை நடக்கும் இடத்தின் அருகே, தற்காலிக சாலை அமைக்கப்பட்டு குறுக்கே, தரைப்பாலமும் கட்டப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவில் இருந்து குசமலி கிராமத்தில் பெய்த கனமழையால், அந்த கிராமத்தில் ஓடும் மல்லபிரபா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
பாலம் கட்டும் பணிக்காக வைத்திருந்த குழாய் உள்ளிட்ட இரும்பு பொருட்களும் அடித்து செல்லப்பட்டன. பாலம் அடித்து செல்வதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு தான், கோவா மாநில அரசு பஸ் கடந்து சென்று உள்ளது.
பஸ் சென்ற போது பாலம் இடிந்து விழுந்து இருந்தால், பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்று, கிராம மக்கள் கூறினர். தரைப்பாலம் இடிந்து உள்ளதால், சோர்லா மலைப்பகுதி வழியாக, பெலகாவி - கோவா இடையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
சோளம், கரும்பு
பல்லாரியின் சண்டூரில் கடந்த ஒரு வாரமாக பெய்யும் கனமழையால், நாரிஹல்லா அணை நிரம்பி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. கதக்கின் ரோன் தாலுகா யவகல் கிராமத்தில் ஓடும் நாரிஹல்லா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
வெங்காயம், சோளம், கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. ராய்ச்சூர் சிந்தனுாரில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், மாதுளை பழங்கள் செடியில் இருந்து விழுந்தன.
மஹாராஷ்டிராவில் பெய்யும் கனமழையால், கொய்னா அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே, யாத்கிர் வடகேரா தாலுகாவில் உள்ள, பசவசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து நேற்று 45,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
மண் குவியல்
கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் மங்களூரில் நேற்று 2வது நாளாக, கனமழை கொட்டி தீர்த்தது. கங்கனாடி என்ற இடத்தில் ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து எதிரே இருந்த, வீட்டின் இரும்பு கேட் மீது விழுந்தது.
கத்ரி என்ற இடத்தில் ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்புக்கு பின்பக்கம் உள்ள, கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தும் இடத்திற்குள் மண் குவியல் போல தேங்கியது. அடுக்குமாடி குடியிருப்பின் 2 வீடுகளின் ஜன்னல், சுவர் பலத்த சேதம் அடைந்தது.
மங்களூரு தாலுகா வாமஞ்சூர் அருகே கெத்திகல் என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் நிலச்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் ஒரு பக்கமாக மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ரயில் தாமதம்
மங்களூரின் படில் - ஜோகட்டே இடையில் ரயில் பாதையில் மண் சரிந்து விழுந்தது. மண்ணை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நடந்ததால், ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
உத்தர கன்னடாவின் கார்வார் சிர்சியில் தேவிமனே வனப்பகுதி சாலையில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சிர்சி - குமட்டா இணைப்பு துண்டிக்கப்பட்டது. சிக்கமகளூரு மாவட்டத்தின் கலசா, குதிரேமுக்கா, கொப்பா, சிருங்கேரி, கொட்டிகேஹாரா, என்.ஆர்.புரா, ஆல்துார், கெம்மனகுந்தி பகுதிகளில் கனமழை பெய்கிறது.
சிருங்கேரி அருகே நெம்மர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்ட இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மண் அகற்றப்பட்ட பின் வாகனங்கள் சென்றன.