/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் பெய்த கனமழை 343 கி.மீ., சாலைகள் சேதம்
/
பெங்களூரில் பெய்த கனமழை 343 கி.மீ., சாலைகள் சேதம்
ADDED : மே 27, 2025 11:53 PM

பெங்களூரு : பெங்களூரில் கடந்த வாரம் பெய்த கனமழையில், 343 கி.மீ., சாலைகள் சேதம் அடைந்துள்ளன. 188 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் சேதமடைந்து உள்ளன.
கர்நாடகாவில் முன்கூட்டியே துவங்கிய மழையால், மஹாதேவபுரா மண்டலத்துக்கு உட்பட்ட சாய் லே - அவுட் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மட்டுமின்றி, எலஹங்காவின் கெம்பே கவுடா வார்டு, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், ஆர்.ஆர்.நகர் லே - அவுட், சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மோசமான நிர்வாகத்தால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. குடியிருப்பு பகுதியில் சிக்கியவர்களை, ரப்பர் படகு மூலம், தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். கன மழையால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
ஜி.பி.ஏ., எனும் பெருநகர பெங்களூரு ஆணையத்துக்கு உட்பட்ட பகுதியில், 343 கி.மீ., சாலைகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அத்துடன், மழையால் 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்து உள்ளன.
பொம்மனஹள்ளி மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில், 147 கி.மீ., சாலைகள் பாதிக்கப்பட்டு, 71 கோடி ரூபாய் இழப்பு;
எலஹங்கா மண்டலத்தில் 37.80 கி.மீ., சாலைகள் பாதிக்கப்பட்டு, 15.81 கோடி ரூபாய் இழப்பு;
ஆர்.ஆர்.நகர் மண்டலத்தில் 30.24 கி.மீ., சாலைகள் பாதிக்கப்பட்டு, 49.71 கோடி ரூபாய் இழப்பு;
தாசரஹள்ளி மண்டலத்தில் 34.35 கி.மீ., சாலைகள் பாதிக்கப்பட்டு, 18 கோடி ரூபாய் உட்பட 188 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும், மழையால் பொம்மனஹள்ளி மண்டலத்தில் இருவரும், மஹாதேவபுரா, பெங்களூரு தெற்கில் தலா ஒன்று என ஒரு பெண் உட்பட நான்கு பேர் இறந்துள்ளனர். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதுபோன்று, பலத்த காற்றுடன் பெய்த கன மழையால், பெங்களூரு தெற்கில் 65 மரங்களும், பொம்மனஹள்ளியில் 22 மரங்களும்; பெங்களூரு கிழக்கில் 19 மரங்களும்; ஆர்.ஆர்., நகரில் 13 மரங்களும்; எலஹங்காவில் 12 மரங்கள் உட்பட 149 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
பெங்களூரு தெற்கில் 98 மரக்கிளைகள்; பெங்களூரு கிழக்கில் 71; பொம்மனஹள்ளியில் 42; எலஹங்காவில் 29; ஆர்.ஆர்., நகரில் 21; மஹாதேவபுராவில் 17; தாசரஹள்ளியில் 11 உட்பட 300 மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.