ADDED : மே 06, 2026 04:45 AM
பெங்களூரு: 'இன்று முதல் 9ம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
மத்திய பிரதேசத்தில் இருந்து விதர்பா, மராத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக, மன்னார் வளைகுடா வரை சுமார் 1.5 கி.மீ., உயரத்துக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் தாக்கத்தால், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் 9ம் தேதி வரை வட மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களின் உட்பகுதிகளில், மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலு ம், கடலோர கர்நாடகாவின் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களிலும் வரும் 9 தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய் ப்பு உள்ளது.
பெங்களூரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெங்களூரு நகரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும். மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 30 - 40 கி.மீ., வரை அடிக்கும்.
ஐந்து நாட்களுக்கு மாநிலத்தின் வெப்ப நிலையில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. மழை காரணமாக மாலையில் வானிலை குளிர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. பொது மக்கள், மரங்களின் கீழ் நிற்க வேண்டாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
இதற்கிடையில், நேற்று மாலை பெங்களூரு நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிலர் மழையை பொருட்படுத்தாமல், நனைந்தபடி வாகனங்களில் சென்றனர். சிலர் சுரங்கப்பாதைகள், பஸ் நிறுத்தங்களில் தஞ்சம் புகுந்தனர்.
