/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஊருக்கு கிளம்பிய மக்கள் கடும் போக்குவரத்து நெரிசல்
/
ஊருக்கு கிளம்பிய மக்கள் கடும் போக்குவரத்து நெரிசல்
ஊருக்கு கிளம்பிய மக்கள் கடும் போக்குவரத்து நெரிசல்
ஊருக்கு கிளம்பிய மக்கள் கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : அக் 03, 2025 01:30 AM

பெங்களூரு: தொடர் விடுமுறையை முன்னிட்டு, பெங்களூரில் வசிக்கும் மற்ற மாவட்டத்தினர், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால், நகரின் வெளிவட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ஐ.டி., பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள், தனியார் நிறுவனங்களில், மாநிலத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணி செய்கின்றனர்.
நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜை, நேற்று காந்தி ஜெயந்திக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இன்று ஒரு நாள் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும். நாளையும், நாளை மறுநாளும் வார இறுதி நாட்கள் என்பதால், பெங்களூரில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றனர்.
இதனால் பெங்களூரு நகரின் வெளிவட்ட சாலைகள், பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பல்லாரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், மக்கள் கடுப்பாகினர். குறிப்பாக, நெலமங்களா புறவழி சாலை சுங்கச்சாவடியில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் ஒரு புறம் அவதி அடைந்தாலும், மறுபுறம் வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெங்களூரு நகரில் வழக்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை.
இதனால், பெங்களூரு வாசிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.அதே சமயம் ஊருக்கு சென்றவர்கள்,விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை, சொந்த ஊர்களில் இருந்து பெங்களூரு திரும்புவர் என்பதால், அன்றைய தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
சிக்கமகளூரு, குடகு, ஷிவமொக்கா, மைசூரு போன்ற மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்ததால், அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.