/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடும் குளிரில் வாடும் ஆதரவற்றோர்; 40 நாட்களில் 15 பேர் உயிரிழப்பு
/
கடும் குளிரில் வாடும் ஆதரவற்றோர்; 40 நாட்களில் 15 பேர் உயிரிழப்பு
கடும் குளிரில் வாடும் ஆதரவற்றோர்; 40 நாட்களில் 15 பேர் உயிரிழப்பு
கடும் குளிரில் வாடும் ஆதரவற்றோர்; 40 நாட்களில் 15 பேர் உயிரிழப்பு
ADDED : ஜன 05, 2026 06:23 AM
பெங்களூரு: பெங்களூரில் கடுமையான குளிர், துாசி, தெரு நாய்களின் தொந்தரவு, விஷமிகளின் தொல்லை என, பல்வேறு பிரச்னைகளால் ஆதரவற்ற மக்கள் பரிதவிக்கின்றனர். கடந்த, 40 நாட்களில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வேலை தேடி பெங்களூருக்கு வந்தவர்களும், பிச்சைக்காரர்களும் தங்க இடமின்றி தவிக்கின்றனர். நடைபாதைகள், சாலை ஓரம், கடைகளின் எதிரே, மேம்பாலங்களின் கீழ்ப்பகுதி, மெஜஸ்டிக் ரயில் நிலையம், பஸ் நிலையம் உட்பட கிடைத்த இடங்களில் படுத்து உறங்குகின்றனர்.
அவர்களில் மூத்த குடிமக்கள் மற்றும் சிறார்கள் கடுங்குளிரால் அவதிப்படுகின்றனர். டிசம்பரில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.
இவர்களுக்கு பல தொண்டு அமைப்புகள், போர்வை மற்றும் உணவு வழங்கின. நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது வாகனம் மோதியது, அதிகமான குளிர் உட்பட பல்வேறு காரணங்களால், கடந்த, 40 நாட்களில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக கே.ஆர்.மார்க்கெட், மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், ரயில் நிலையங்களின் சுற்றுப்பகுதிகளில் வசித்தவர்கள் தான் இறந்துள்ளனர்.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிழைப்பு தேடி பெங்களூருக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2025 டிசம்பரில் குளிர் அதிகமாக இருந்தது. டிசம்பர், 22 முதல், 25 வரை வெப்ப நிலை, 13 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்தது.15 ஆதரவற்றோரின் இறப்புக்கு, குளிரே காரணம் என்று கூற முடியாது. அவர்களின் உடல் நிலை பாதிப்பும் காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொண்டு அமைப்பினர் கூறியதாவது:
ஆதரவற்ற மக்கள், இரவு வேளையில் தங்குவதற்காக, கிரேட்டர் பெங்களூரு ஆணையம், 74 ஆதரவற்றோர் மையங்கள் கட்டுவதாக அறிவித்தது. அவற்றில், 48 மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. சில மையங்களில் அடிப்படை வசதிகளே இல்லை.
பெரும்பாலான ஆதரவற்றோர் மையங்களில் இடம் இருந்தாலும் ஆதரவற்றோர் அங்கு தங்குவது இல்லை. சாலை ஓரத்திலேயே படுக்கின்றனர்.
இதற்கு என்ன காரணம் என, ஆய்வு செய்த போது, மையங்களில் ஒரு வேளை மட்டுமே உணவு கிடைக்கிறது. பிச்சை எடுக்கவும் விடுவதில்லை. சாலை ஓரத்தில் படுத்திருந்தால், தொண்டு அமைப்புகள் உணவு, உடைகள் வழங்குவர். இதே காரணத்தால் ஆதரவற்றோர் மையங்களில் தங்க தயங்குகின்றனர்.
ஆதரவற்ற மையங்கள் நடத்தும் தொண்டு அமைப்புகளுக்கு, அரசு ஊக்கமளிக்க வேண்டும். கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

