போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட் தடை!: சமரச பேச்சு நடத்துவது குறித்து நாளை தெரிவிக்க உத்தரவு
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட் தடை!: சமரச பேச்சு நடத்துவது குறித்து நாளை தெரிவிக்க உத்தரவு
ADDED : மே 19, 2026 11:38 PM

பெங்களூரு: போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினரின் போராட்டத்துக்கு நேற்று தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்றம், முதல்வர் அல்லது போக்குவரத்து துறை அமைச்சருடன் பேச்சு நடத்த சங்கத்தினருக்கு உத்தரவிட்டது. அதே வேளையில், இன்று நடக்க விருந்த போராட்டத்தை, ஊழியர் சங்கத்தினர் வாபஸ் பெற்றனர். எனவே, வழக்கம் போல் பஸ்கள் இயங்கும்.
இவர்கள், 'கடந்த, 2020 முதல், 2023 வரை, 38 மாதங்களாக நிலுவையில் உள்ள புதிய ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்குதல்; போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து, சம ஊதியம் வழங்குதல்' உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இதில், பல கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட மாதங்கள் வரையிலான நிலுவை தொகையையும் வழங்க முன்வந்துள்ளது.
ஊழியர்களின் 25 சதவீத ஊதிய திருத்தத்தில், 12.5 சதவீதத்துக்கு அரசு ஒப்புக்கொண்டு உள்ளது. 38 மாத ஊதிய உயர்வு நிலுவை தொகையில், 26 மாத ஊதிய நிலுவை தொகையின் முதல் தவணையாக, 450 கோடி ரூபாயை அரசு சமீபத்தில் விடுவிடுத்தது.
இதை ஏற்காத சங்கத்தினர், இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.
இதற்கு தடை விதிக்கும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பெங்களூரை சேர்ந்த வீட்டு பணி செய்யும் வேதவதி, கட்டட தொழிலாளர் ஸ்ரீதர் ஆகியோர் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:
மாநிலத்தில் தினமும், 1.20 கோடி பேர் அரசு பஸ்சில் பயணிக்கின்றனர். இதில், 60 சதவீதம் பேர் பெண்கள். சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர்.
பாதிப்பு எஸ்.எஸ்.எல்.சி., துணை தேர்வுகள், ஏற்கனவே துவங்கி, மே 25 வரை நடக்கிறது. இதற்காக கிராமம், டவுன் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், இவர்கள் பாதிக்கப்படுவர். இது தவிர, பஸ்சை நம்பி உள்ள தினக்கூலிகள், உடல் நலம் பாதித்தவர்கள், மூத்த குடிமக்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பாதிக்கப்படுவர்.
'ஏற்கனவே, 2023, 2025ல் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால், போராட்டம் திரும்ப பெறப்பட்டது. கடந்த, 2025ல் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், சில இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக, 17,200 ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளன.
'எனவே, மாநில அரசும், போக்குவரத்து கார்ப்பரேஷனும், ஊழியர்களின் போராட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.
இம்மனு நேற்று நீதிபதிகள் சூரஜ் கோவிந்தராஜு, மன்மத ராவ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடந்த விவாதம்:
போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தரப்பு வக்கீல் கிளிப்டன் டி ரோசாரியோ: எங்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றவில்லை. சட்டப்படி ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளோம் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். எங்களின் கோரிக்கையை அரசு ஏற்காததால், இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
துணை தேர்வுகள் மனுதாரர்கள் தரப்பு வக்கீல் விக்ரம் ஹுயிலாகோல்: எஸ்.எஸ்.எல்.சி., துணை தேர்வுகள் ஏற்கனவே துவங்கி விட்டன. இந்த வேலை நிறுத்தம், சாமானிய மக்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும்.
நீதிபதிகள்: பல்வேறு தொழிற்சங்கங்கள் தலைமையிலான கூட்டு நடவடிக்கை குழு, 2026 ஏப்., 29ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
இப்போது வேலை நிறுத்தம் செய்ய தேவையில்லை. உங்களுக்கு ஏற்கனவே, மாநில அரசு, 12.5 சதவீதம் ஊதிய திருத்தம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே, 450 கோடி ரூபாய் விடுவித்து உள்ளது.
மேலும், 200 கோடி ரூபாய் வழங்க முயற்சிப்போம்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ''நீங்கள் எப்போது கூட்டம் நடத்துவீர்கள்,'' என அரசு தரப்பு வக்கீலை பார்த்து கேட்டனர்.
அரசு தரப்பு கூடுதல் தலைமை வக்கீல் தாராநாத்: போக்குவரத்து துறை அமைச்சர் அல்லது முதல்வர் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழுவுடன் எப்போது கூட்டம் நடத்தப்படும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்ய, இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும்.
நீதிபதிகள்: முதல்வர், துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கூட்டு நடவடிக்கை குழுவுடன் எப்போது பேச்சு நடத்துகின்றனர் என்பதை, மே 21ம் தேதி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து, எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். போராட்டம் தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு அறிவித்திருந்தோம். இன்று வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படும்.
ஜெயதேவராஜ் அர்ஸ்,
பொது செயலர், கூட்டு நடவடிக்கை குழு
