ADDED : மார் 24, 2026 06:24 AM

பெங்களூரு: 'சமையல் காஸ் வினியோகம் விஷயத்தில், அரசின் முடிவில் தலையிட முடியாது' என்று கூறி, ஹோட்டல்கள் சங்கத்தின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. .
மேற்காசிய போர் பதற்றத்தால், நாடு முழுதும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சில ஹோட்டல்களில் விறகு அடுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், 'ஹோட்டல்களுக்கு தடையில்லாமல் வர்த்தக காஸ் சிலிண்டர்களை வினியோகிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இம்மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு நேற்று விசாரணையை ஒத்தி வைத்தது.
யாருக்கு முன்னுரிமை? நேற்று இம்மனு நீதிபதி சச்சின் சங்கர் மகடம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம்:
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: நம் கட்டுப்பாட்டில் இல்லாத சில விஷயங்களால் இந்நிலை ஏற்பட்டு உள்ளது. வினியோகம் தடைபடாமல் அல்லது மிக குறைந்த அளவில் தடைபடுவதை உறுதி செய்ய, அரசு தன்னால் இயன்றவரை செயல்பட்டு வருகிறது. இதை நிர்வாகத்திடம் விட்டு விடுங்கள். ஒவ்வொரு நாளும் நிலைமை மாறி கொண்டிருக்கிறது. ஹோட்டல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமா அல்லது வீடுகளுக்கா என்பது நமக்கு தெரியாது.
நீதிபதி: ஹோட்டல்களுக்கு நல்ல செய்தி ஏதாவது உள்ளதா? கூடுதல் தகவல்கள் உள்ளதா?
சொலிசிடர் ஜெனரல்: இதுவரை இல்லை. இத்தகைய விஷயங்கள் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஆலோசித்து வருகிறது. இரு அரசுகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.
சமையல் காஸ் வினியோகத்தில் ஏதேனும் முறைகேடு கண்டறியப்பட்டால், மாநில அரசு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹோட்டல்கள் தரப்பு வக்கீல்: இன்று (நேற்று) சமையல் காஸ் விஷயம் தொடர்பாக கூட்டம் நடக்கிறது. எனவே, இவ்வழக்கை நிலுவையில் வைத்திருக்க வேண்டும்.
சொலிசிட்டர் ஜெனரல்: இத்தகைய சூழலில், மத்திய, மாநில அரசுகள் சம நிலையில் இருக்க வேண்டும்; வேறுபாடு இருக்கக்கூடாது. இதற்கு சரியான வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.
மனு தள்ளுபடி நீதிபதி: மற்ற நாடுகளை விட, நம் அரசு தங்களால் முடிந்ததை சிறப்பாக செய்கிறது. இதை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. உலகளாவிய அரசியல் மோதல்களால் உருவான முக்கிய பிரச்னைகள் குறித்து, நிர்வாக கொள்கை முடிவுகள் சம்பந்தப்பட்ட இவ்விஷயங்களில், என்னால் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
இத்தகைய பிரச்னைகளில் தலையிட மறுத்த மும்பை உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய நிலைபாட்டுடன், நானும் உடன்படுகிறேன். எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
'தினமும் 10,000 காஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்படும்'
பெங்களூரில் வர்த்தக காஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக எண்ணெய் நிறுவன நிர்வாகிகளுடன், உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில், 20 சதவீத அளவுக்கு வர்த்தக சிலிண்டர்களை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஹோட்டல் துறை உட்பட உணவு பதப்படுத்தும் ஆலைகளின் குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்ய, குறைந்தது, 50 சதவீத வர்த்தக சிலிண்டர்கள் வழங்கப்பட வேண்டும்.
தற்போது மாநிலத்தில் 7,000 வர்த்தக சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிலிண்டர்களை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும்.
10,000 சிலிண்டர்
ஹோட்டல்கள், உணவகங்கள், உணவு பதப்படுத்தும் ஆலைகள், ஆட்டோ காஸ் உட்பட பல்வேறு துறைகளுக்கு தினமும் 15 முதல் 16 ஆயிரம் சிலிண்டர்கள் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில், ஹோட்டல்கள், உணவகங்கள், தாபாக்கள், உணவு பதப்படுத்தும் ஆலைகள் உட்பட பல்வேறு சேவைகளுக்கு, தினமும் 10,000 வர்த்தக சிலிண்டர்கள் வழங்கப்படும்.
அதனுடன், வேளாண்மை, அது சார்ந்த துறைகள், மருந்து துறை, மீன்வளம், பட்டு வளர்ப்பு மற்றும் பிற அத்தியாவசிய துறைகளுக்கு 500 சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.
கள்ளச் சந்தையை கட்டுப்படுத்த, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, அனைத்து வர்த்தக சிலிண்டர் பயனர்களும் ஒரு வாரத்துக்குள் ஜி.ஏ.ஐ.எல்., நிறுவனத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் குழாய்வழி எரிவாயு வினியோகத்தை விரிவுபடுத்த இந்த பெயர் பதிவு உதவும்.
ஆவணம் அடிப்படையிலான வினியோக முறையை உருவாக்குவதால், தவறான பயன்பாட்டை தடுத்து, அத்தியாவசிய பயனாளர்களுக்கு எரிவாயுவை வழங்குவதே அரசின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
