/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜார்ஜ் மீது விசாரணை ஐகோர்ட் இடைக்கால தடை
/
ஜார்ஜ் மீது விசாரணை ஐகோர்ட் இடைக்கால தடை
ADDED : ஆக 07, 2025 05:17 AM

பெங்களூரு: ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.
கர்நாடகாவில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு, மின் துறை டெண்டர் அறிவித்தது. இந்த டெண்டரில், 16,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அஸ்வத் நாராயணா, விஸ்வநாத், தீரஜ் முனிராஜு ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை ரத்து செய்யும்படி, மின் துறை அமைச்சர் ஜார்ஜ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, நீதிபதி அருண் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
வாதங்கள் துவங்குவதற்கு முன், நீதிபதி அருண், ''தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி, மற்றொரு அரசியல் கட்சி மீது கிரிமினல் வழக்கை பதிவு செய்யும் கலாசாரத்தை பார்த்திருக்கிறோம். அதை கர்நாடகாவும் நகலெடுத்து உள்ளது. ஒரு முறை இவர் அதிகாரத்தில் இருப்பார்; அடுத்த முறை அவர் அதிகாரத்தில் இருப்பார்,'' என்றார்.
அதன் பின், மனுதாரர் தரப்பு வக்கீல் நாகேஷ் வாதிட்டதாவது:
குற்றம்சாட்டப்பட்ட நபர் பொதுநல சேவகர் மட்டுமின்றி, அமைச்சராகவும் உள்ளார். மனுதாரர் மீது ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17 'ஏ'ன் கீழ், விசாரணை நடத்த வேண்டும் என்றால், முன் அனுமதி பெற வேண்டும். இது தொடர்பாக, எதிர்தரப்பினர், கவர்னரிடம் அனுமதி கோரியுள்ளனர். இந்த மனு நிலுவையில் இருக்கும் போது, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் தனி புகார் தாக்கல் செய்துள்ளனர்.
அந்நீதிமன்றமும், அடுத்த விசாரணையின் போது, அறிக்கை தாக்கல் செய்யுமாறு லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு சட்ட விரோதமானது. உரிய அனுமதி இல்லாமல், லோக் ஆயுக்தா அதிகாரிகள், விசாரணை நடத்த முடியாது. எனவே, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
எதிர்தரப்பு வக்கீல் லட்சுமி அய்யங்கார் வாதிடுகையில், ''மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் அறிக்கை சமர்ப் பிக்கும்படி மட்டுமே உத்தரவிட்டு உள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. எனவே, தடை விதிக்க கூடாது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண், ''மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. எதிர்தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. வழக்கு வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.