ஜாமின் கேட்டு பிரஜ்வல் ரேவண்ணா மனு எஸ்.ஐ.டி.,க்கு உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்'
ஜாமின் கேட்டு பிரஜ்வல் ரேவண்ணா மனு எஸ்.ஐ.டி.,க்கு உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்'
ADDED : ஜூன் 20, 2026 03:34 AM

பெங்களூரு: பெண்ணை நிர்வாணமாக, 'வீடியோ' எடுத்த வழக்கில், ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு தொடர்பாக, எஸ்.ஐ.டி.,க்கு, உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
ஹாசன் தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. வேலைக்கார பெண் உட்பட மூன்று பெண்களை பலாத்காரம் செய்து, மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதில் ஒரு வழக்கில் அவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பலாத்கார வழக்கில் பிரஜ்வல் கைதான சில நாட்களில், ஹாசனை சேர்ந்த பெண் ஒருவர், போலீசில் அளித்த புகாரில், 'பிரஜ்வல் ஹாசன் எம்.பி.,யாக இருந்த போது, எனது மகனுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 'சீட்' வாங்கி தர அவரை சந்தித்தேன்.
'எனது மொபைல் போன் நம்பரை வாங்கி கொண்டார். அடிக்கடி எனக்கு வீடியோ கால் செய்து, நிர்வாணமாக தோன்றும்படி தொல்லை கொடுத்தார். ஒரு முறை அவருடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசினேன். என்னை ஆபாசமாக வீடியோ, புகைப்படம் எடுத்து மிரட்டினார்' என கூறியிருந்தார்.
அந்த புகாரில், பிரஜ்வல் மீது வழக்குப்பதிவானது. இந்நிலையில் நிர்வாண வீடியோ எடுத்த வழக்கில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் தரப்பில் மனு செய்யப்பட்டது. நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார்.
நேற்று நடந்த விசாரணையின் போது, பிரஜ்வல் தரப்பில் ஆஜரான வக்கீல் அருண் வாதிடுகையில், ''எனது மனுதாரருக்கு ஒரு வழக்கில் தண்டனை கிடைத்து விட்டதாலும், தற்போது ஜாமின் கேட்டுள்ள வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாலும், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெகதீஷ், ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு ஆட்சேபனை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இதை ஏற்று கொண்ட நீதிபதி எஸ்.ஐ.டி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அடுத்த மாதம் 3ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
