தாய், மகன் கொலை வழக்கு சி.ஐ.டி., விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
தாய், மகன் கொலை வழக்கு சி.ஐ.டி., விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 09, 2026 06:16 AM
பெங்களூரு: தனது தாய், சகோதரன் கொலை வழக்கை, மீண்டும் விசாரிக்க வேண்டும்' என்று கோரிய பெண்ணின் மனுவை ஏற்றுக் கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம், இவ்வழக்கை சி.ஐ.டி., விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
குடகு மாவட்டம் குஷால் நகர் ஷிரங்காலா கிராமத்தை சேர்ந்தவர்கள் அக்கம்மா. இவருக்கு மகள் லட்சுமி, மகன் ரகு என இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018 டிச., 12ல் அக்கம்மாவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த குபேரா, 37, ஆஷா, 36, ரேஷ்மா, 35, நாகேஷ், 42, ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நான்கு பேர் கைது வாக்குவாதம் முற்றி கற்கள், அரிவாளால் தாக்கி அக்கம்மா படுகொலை செய்யப்பட்டார். அவரின் மகன் ரகு அளித்த புகாரின்படி, குஷால் நகர் ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட குபேராவின் சகோதரர், 'அக்கம்மாவை, அவரது மகன் ரகு கொலை செய்ததாக கூறி', வீடியோவுடன் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், குஷால் நகர் போலீசார், ரகுவை கைது செய்து, மற்றவர்களை விடுவித்தது.
மரத்தடியில் பிணம் கைது செய்யப்பட்ட ரகு, உயர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதன் பின், 2021 பிப்., 22ல், ஷிரங்காலா கிராமத்தில் உள்ள சந்தோஷ் பார் அருகே, மரத்தடியில் இறந்து கிடந்தார்.
ரகுவின் சகோதரி லட்சுமி, 'ரகுவின் மரணம் சந்தேகம் அளிக்கிறது. எனவே மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்' என்று போலீசில் கோரிக்கை விடுத்தும் ஏற்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்திலும், 'குற்றமற்றவர்கள்' என்ற அறிக்கையை போலீசார் சமர்ப்பித்திருந்தனர்.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ரகுவின் சகோதரி லட்சுமி ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது:
மனுதாரரின் தாய், சகோதரன் மரணத்திற்கு காரணமானவர்களை அடையாளம் காண வேண்டும் என்றால், வழக்கு மீண்டும் விசாரிக்க வேண்டும். அப்போது தான் நீதி கிடைக்கும்.
உண்மையை தேடும் பாதையில் செல்ல வேண்டிய விசாரணை பாதியிலேயே செயலிழந்துவிட்டது. எனவே, தாய், மகனின் மரணத்தில் நடந்த அநீதியை நிவர்த்தி செய்ய, ஒரு முறையான புலனாய்வு அமைப்பு தேவை. இவ்வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடி க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
