சாமுண்டி மலைக்கு செல்ல ரன்வீர் சிங்கிற்கு ஐகோர்ட் உத்தரவு
சாமுண்டி மலைக்கு செல்ல ரன்வீர் சிங்கிற்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஏப் 26, 2026 01:07 AM

பெங்களூரு: 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தில், வரும் கடவுளை, இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'நான்கு வாரங்களுக்குள் மைசூரு சாமுண்டி மலை கோவிலுக்கு செல்ல வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், 'காந்தாரா திரைப்பட கதாபாத்திரம் குறித்து விமர்சிக்கும் வகையில் பேசி' முகபாவனை காண்பித்தார்.
இதைக்கண்டித்து, பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடன் தன் சமூக வலைதளம் மூலம் ரன்வீர் சிங் மன்னிப்பு கோரியிருந்தார்.
இதை புகார்தாரர் ஏற்கவில்லை. இவ்விஷயம் நீதிமன்றத்துக்கு சென்றது. பல கட்ட வாதங்களுக்கு பின், நேற்று மீண்டும் நீதிபதி நாகபிரசன்னா முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
ரன்வீர் சிங் தரப்பு வக்கீல்: ரன்வீர் சிங் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். கோவிலுக்கு செல்லவும் தயாராக உள்ளார். ஆனால், எப்போது செல்வார் என்ற தேதி குறிப்பிடவில்லை. நீதிமன்றம் குறிப்பிடும் நாளில் அவர் கோவிலுக்கு செல்வார்.
புகார்தாரர் தரப்பு வக்கீல்: ம னுதாரர் கோவிலுக்கு செல்வதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஆனால், நேரம் குறிப்பிடவில்லை. இதற்கு எவ்வளவு காலமாகும் என்று தெரியவில்லை.
ரன்வீர் தரப்பு வக்கீல்: ரன்வீர் சிங், சாமுண்டி மலைக்கு செல்வதில் பாதுகாப்பு பிரச்னை உள்ளது.
புகார்தாரர் வக்கீல்: கர்நாடக போலீசார் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் பாதுகாப்பு வழங்குவர்.
நீதிபதி நாகபிரசன்னா: போலீஸ் துறை சக்தி வாய்ந்ததாக இருப்பதால் தான், சேர்ந்து வாழும் உறவுகள், தம்பதியர் வழக்குகளை மட்டுமே விசாரிக்கின்றனர். உண்மையான குற்றங்களை யாரும் விசாரிப்பதில்லை.
அனைவரும் பி.என்.எஸ்., பிரிவு 69ன் கீழ் வரும், திருமணம் என்ற போர்வையில் நிகழும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களை மட்டுமே விசாரிக்கின்றனர். மனுதாரர் அடுத்த நான்கு வாரங்களுக்குள் கோவிலுக்கு செல்ல வேண்டும். எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
