'லாக் அப்' மரணம் அறிக்கை சமர்ப்பிக்க மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
'லாக் அப்' மரணம் அறிக்கை சமர்ப்பிக்க மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஏப் 09, 2026 02:08 AM
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக, கர்நாடக மக்கள் உரிமையியல் சங்கம் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்ட நான்கு கோரிக்கைகளை, உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதே வேளையில், ஐந்தாவது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.
கர்நாடக மக்கள் உரிமையியல் சங்கம் தாக்கல் செய்த பொதுநல மனு:
பெங்களூரு சன்னஹள்ளியை சேர்ந்த தர்ஷனை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கினர். இதில் அவர் மரணமடைந்தார். இது தொடர்பாக, விவேக் நகர் போலீசார் மீது மாதநாயகனஹள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் நிலையத்தில் நிகழும் துன்புறுத்தல் தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. ஒருவரை கைது செய்த பின், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளன.
துன்புறுத்தல் நிரூபிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம், பல உத்தரவுகளில் அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளது.
எனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் பல போலீஸ் நிலையங்களில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து விசாரிக்கவும்; வழக்கு தொடரவும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும்; அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.
இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம்:
* நீதிபதி விபு பக்ரு: போலீஸ் நிலைய மரணங்கள் குறித்து பல தீர்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. உங்களுக்கு என்ன உத்தரவு வேண்டும்.
* மனுதாரர் வக்கீல் கிளிப்டன் ரொசாரியோ: நாங்கள் போலீஸ் நிலைய மரணங்களுக்காக இழப்பீடு கோரவில்லை. காவலில் நடந்த துன்புறுத்தல் குறித்து கேட்கிறோம்.
* நீதிபதி: காவலில் இருக்கும் போது ஏற்படும் துன்புறுத்தல் குறித்து பல தீர்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. ஒருவரை கைது செய்த பின், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் ஏற்கனவே உள்ளன. அந்த நடைமுறை மீறப்படும் பட்சத்தில் வழிகாட்டுதல் வழங்கப்படலாம்.
துன்புறுத்தல் நிரூபிக்கப்பட்ட சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம், அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்து உள்ளது.
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படாத போலீஸ் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, போலீஸ் டி.ஜி.பி., மற்றும் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.
அதே வேளையில், கடந்தாண்டு நவம்பரில் நடந்த சன்னஹள்ளியின் தர்ஷன் மரணம் குறித்து, விவேக் நகர் போலீஸ் நிலைய அதிகாரிகள் மீது, மாதநாயகனஹள்ளி போலீசார் எடுத்த நடடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக, போலீஸ் டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜூலை 15க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
***
