/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
ADDED : ஜூலை 12, 2025 10:56 PM

பெங்களூரு: 'வகுப்புவாத வெறுப்பு பேச்சுகள் தொடர்பான குற்றங்களில் பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா ஈடுபடக்கூடாது' என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டித்து உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், தெக்கரில் மே மாதம் ஸ்ரீகோபாலகிருஷ்ண கோவில் பிரம்ம கல உத்சவம் நடந்தது. அப்போது, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா, ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதை எதிர்த்து, தெக்கருவை சேர்ந்த இப்ராஹிம், புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் பூஞ்சா மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி கிருஷ்ண குமார் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் இப்ராஹிம் சார்பு வக்கீல் பாலன் வாதிடுகையில், ''பூஞ்சா தொடர்ந்து முஸ்லிம் சமுதாயத்தினர் பற்றி அவதுாறாக பேசி வருகிறார். அவர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை பெற்றுள்ளார். சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரை அவர் மீது ஏழு எப்.ஐ.ஆர்.,கள் பதிவாகி உள்ளன. இதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்,'' என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ண குமார், ''அரசு தரப்பு வக்கீல், மனுதாரர் வக்கீல்களின் வேண்டுகோளை ஏற்று, அடுத்து விசாரணை வரும் வரை, ஹரிஷ் பூஞ்சா வகுப்புவாத வெறுப்பு பேச்சுகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடக்கூடாது,'' என்றார்.

