/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு சொகுசு பஸ்களில் அதிக கட்டணம் வசூல்
/
அரசு சொகுசு பஸ்களில் அதிக கட்டணம் வசூல்
ADDED : மே 12, 2025 06:54 AM
பெங்களூரு,: கே.எஸ்.ஆர்.டி.சி., சொகுசு பஸ்களில் சில்லரை பிரச்னையை தவிர்க்க, டிக்கெட் கட்டணத்தை விட அதிகமாக பணம் வசூலிப்பது பயணியரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால், நீண்ட துாரம் பயணம் செய்வோர் பலரும் கே.எஸ்.ஆர்.டி.சி., சொகுசு பஸ்களில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர்.
இந்நிலையில், கே.எஸ்.ஆர்.டி.சி., சொகுசு பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை விட அதிகமாக பணம் வசூலிக்கப்படுவதாக, கடந்த சில மாதங்களாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சில்லரை பிரச்னையை தவிர்க்கவே பணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு 'ரவுண்ட் ஆப்' எனவும் பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
உதாரணமாக 667 ரூபாய் டிக்கெட் என்றால் 670 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த முறைக்கு துவக்கத்தில் இருந்தே, எதிர்ப்பு வந்தது. இதை நிறுத்தாதால், தற்போது பயணியர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தங்கள் மோசமான அனுபவங்கள் குறித்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
இது போன்ற மோசமான நடைமுறை வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்த போதும், இது போன்ற பழங்கால நடைமுறைகள் கடைபிடிப்பது வேதனை அளிப்பதாக சில பயணியர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, மங்களூரு மண்டல கே.எஸ்.ஆர்.டி.சி., மூத்த கண்காணிப்பாளர் ராஜேஷ் ஷெட்டி கூறுகையில், “சில்லரை பிரச்னையை தீர்ப்பதற்காவே ரவுண்ட் ஆப் நடைமுறைக்கு வந்தது. இந்த முறையால், 331 ரூபாய் டிக்கெட்டுக்கு பயணியர் 330 ரூபாய் கொடுத்தால் போதும். இதன் மூலம் பயணியரும் பயனடைகின்றனர்,” என்றார்.