புகைப்பட பிரேமில் மறைத்து கடத்திய ரூ.40 லட்சம் உயர் ரக கஞ்சா பறிமுதல்
புகைப்பட பிரேமில் மறைத்து கடத்திய ரூ.40 லட்சம் உயர் ரக கஞ்சா பறிமுதல்
ADDED : மார் 18, 2026 05:57 AM

தேவனஹள்ளி: தாய்லாந்தில் இருந்து பெங்களூருக்கு புகைப்பட பிரேமில் மறைத்து கடத்திய, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பயணி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், உயர்ரக கஞ்சா கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
விமானத்தில் பயணம் செய்த பயணியர் உடைமைகளை சோதனைக்கு உட்படுத்திய போது, கஞ்சா சிக்கவில்லை. ஒரு பயணியின் பையில் சோதனை நடத்திய போது, சுவரில் பொருத்தும் அலங்கார புகைப்பட பிரேம் இருந்தது. அந்த பிரேம் மீது சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் சுத்தியலால் உடைத்து பார்த்த போது, கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
எடை பார்த்த போது ஒரு கிலோ, 125 கிராம் உயர்ரக கஞ்சா இருந்தது. சர்வதேச சந்தையில் இதன்மதிப்பு39.37 லட்சம் ரூபாயாகும். கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியை கைது செய்தனர். அவரது பெயர், விபரம் வெளியாகவில்லை. கைதான பயணி மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
