சிறைகளில் முறைகேடுகளை கட்டுப்படுத்த உயர்மட்ட கமிட்டி சிபாரிசு
சிறைகளில் முறைகேடுகளை கட்டுப்படுத்த உயர்மட்ட கமிட்டி சிபாரிசு
ADDED : ஜூன் 27, 2026 11:10 PM

பெங்களூரு: கர்நாடக சிறைகளில் நடக்கும் சட்ட விரோத செயல்பாடுகள், செல்வாக்கு மிக்க கைதிகளுக்கு கிடைக்கும் சிறப்பு சலுகைகளை கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்வது தொடர்பாக, 53 சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை, உயர் அதிகார கமிட்டி, உள்துறையிடம் தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை, மங்களூரு, தார்வாட் சிறைகள் உட்பட, கர்நாடகாவின் பல்வேறு சிறைகளில் கைதிகள் மொபைல் போன், போதைப்பொருட்கள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
செல்வாக்கு மிக்க கைதிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறையில் இருந்தே தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலிப்பதும் நடக்கிறது.
இத்தகைய முறைகேடுகளை தடுக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, சட்டம் - ஒழுங்கு பிரிவு துணை எஸ்.பி., ஹிதேந்திரா தலைமையில், மாநில அரசு உயர் மட்ட அளவில் கமிட்டி அமைத்தது. கமிட்டியும் ஆய்வு செய்து, 53 சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை, உள்துறையிடம் அளித்துள்ளது.
இது குறித்து, துணை எஸ்.பி., ஹிதேந்திரா கூறியுள்ளதாவது:
தற்போது பல சிறைகளில், வளாகங்கள் மற்றும் நுழைவாயில்களில் மட்டும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லாததால், மொபைல் போன் பயன்படுத்துவது, போதைப்பொருள் பயன்படுத்துவது, மிரட்டுவது போன்ற சட்ட விரோதங்கள் நடக்கின்றன.
சிறை அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதனால் குற்றங்களை தடுக்க முடியும்.
சிறையில் விசாரணை கைதிகளுக்கு,தொழிற் பயிற்சி, திறன் மேம்பாடு, பல்வேறு பொருட்கள் உற்பத்தி பயிற்சி அளிக்க வேண்டும். வருவாய் சம்பாதிக்க வாய்ப்பளித்தால் கைதிகளின் மன அழுத்தம் குறையும். அவர்கள் விடுதலையாகி வெளியே சென்ற பின், புதிய வாழ்க்கையை அமைத்து கொள்ளவும், உதவியாக இருக்கும்.
சிறைகளில், 30 முதல், 35 சதவீதம் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மொபைல் சிக்னல்கள் சரியான முறையில் செயல்படும்படி, பார்த்து கொள்ள வேண்டும். சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை, டிரோன் வாயிலாக கண்காணித்து தடுக்க வேண்டும்.
சிறை ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டும். ஊழலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். சிறைகளில் டிஜிட்டல் நிர்வகிப்பு நடைமுறையை கொண்டு வர வேண்டும். இ - மானிட்டரிங் வசதி செய்ய வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
சிறைகளின் உள்ளேயும், வெளியிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதால், பிரச்னைகள் சரியாகாது. கைதிகள் அடைக்கப்பட்ட அறைகள், நடமாடும் இடங்கள் என, மற்ற பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தி, அவர்களின் செயல்பாட்டை கண்காணிப்பது அவசியம்.
சிறையில் முறைகேடுகளை தடுக்க, உள்துறைக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். அறிக்கையின் அனைத்து சிபாரிசுகளையும், அரசு செயல்படுத்தினால் மாநிலத்தின் சிறைகளில் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
