ஹெப்பாலில் விரைவில் சுரங்க சாலை பணிகள் அதிகாரிகள் தகவல்
ஹெப்பாலில் விரைவில் சுரங்க சாலை பணிகள் அதிகாரிகள் தகவல்
ADDED : ஜூன் 27, 2026 11:10 PM
பெங்களூரு: ஹெப்பாலில் சுரங்க சாலை பணிகள், விரைவில் துவக்கப்படவுள்ளன. பணிகளை நடத்த இரண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஹெப்பால் கால்நடை மருத்துவ கல்லுாரியில் இருந்து, ஹெப்பால் ஏரி வரை, 2.2 கி.மீ.,க்கு சிறிய சுரங்க சாலை பணிகளுக்கு, இன்னும் சில நாட்களில் அடிக்கல் நாட்டப்படும். இதற்காக மாநில அரசு தயாராகி வருகிறது. பணிகளுக்கு டெண்டர் முடிவாகியுள்ளது. ஹெப்பாலின் எஸ்டீம் மாலில் இருந்து, சில்க் போர்டு வரை, 16.74 கி.மீ.,க்கு சுரங்க சாலை அமைக்க, அதானி உட்பட, இரண்டு நிறுவனங்கள் மட்டுமே முன் வந்துள்ளன.
இந்த விஷயத்தை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் மேலிடத்தின் கவனத்துக்கு சென்றுள்ளார். மேலிடம் ஒப்புதல் அளித்தால், இத்திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.
ஹெப்பால் - சில்க் போர்டு வரையிலான சுரங்க சாலை திட்டத்தின் செலவில், 40 சதவீதம் தொகையை மாநில அரசு ஏற்கும். பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 7,000 கோடி ரூபாய் வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பி.டி.ஏ., நிலத்தை ஏலம் விட்டு, பணம் சேகரிக்கிறது.
லால்பாக் பூங்கா வழியாக, சுரங்க சாலை கடந்து செல்லும். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் திட்டத்தால் லால்பாக் பூங்காவுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது. விதான்சவுதாவில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதை வரும் வகையில், திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
