ADDED : ஆக 16, 2026 11:04 PM

துமகூரு: துமகூரு நகரம் வரை, மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளை பயன்படுத்தி கொள்ள அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
துணை முதல்வர் பரமேஸ்வர் நேற்று அளித்த பேட்டி:
துமகூரு சாலையின் மாதவாரா வரை மெட்ரோ ரயில் இயங்குகிறது. இதை துமகூரு வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, ஏற்கனவே மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளோம்.
துமகூரு மெட்ரோ ரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலையின் நடுப்பகுதியிலும் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இதனால் நெடுஞ்சாலை மீது மெட்ரோ துாண்களை அமைக்க அனுமதி கேட்டு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திற்கு, கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
மெட்ரோ ரயில் பாதை திட்டத்தை, மத்திய அரசின் நிதி உதவியை சாராமல் பொது - தனியார் கூட்டாண்மை மாதிரியில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
இத்திட்டத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நெலமங்களா, தாபஸ்பேட், துமகூரு பகுதிகளில் வணிக நடவடிக்கைகளுக்காக நிலம் ஒதுக்க முடிவு செய்து உள்ளோம். சில உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காண்பித்து உள்ளன.
விரிவான திட்ட அறிக்கை, தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி கொள்ள, மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்த பின், அடுத்தகட்ட நடவடிக்கையை துவங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
