ஹிரியூர் இடைத்தேர்தல் வேட்பாளர் மத்திய அமைச்சர் குமாரசாமி திட்டம்
ஹிரியூர் இடைத்தேர்தல் வேட்பாளர் மத்திய அமைச்சர் குமாரசாமி திட்டம்
ADDED : மே 21, 2026 10:06 PM

சித்ரதுர்கா: ஹிரியூர் தொகுதி இடைத்தேர்தலில், ம.ஜ.த., வேட்பாளரை நிறுத்த, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி திட்டமிட்டு உள்ளார். இதுபற்றி பா.ஜ., மேலிட தலைவர்களுடன் விவாதிக்கவும் அவர் தயாராகி வருகிறார்.
கர்நாடக திட்ட அமலாக்கம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக இருந்தவர் டி.சுதாகர், 65. கடந்த, 10ம் தேதி மரணம் அடைந்தார். அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த ஹிரியூர் தொகுதி காலியாகி உள்ளது.
இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இன்னமும் அறிவிப்பு வெளியாகவில்லை.
காங்கிரஸ் வேட்பாளராக டி.சுதாகரின் மகன் சுகாஸ் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ., பூர்ணிமா சீனிவாஸ் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
ஹிரியூர் தொகுதியில், பா.ஜ.,வுக்கு செல்வாக்கு இல்லை. கடந்த 1952 முதல், 2023 வரை அத்தொகுதியில் நடந்த 17 தேர்தலில், பா.ஜ., ஒரு முறை மட்டுமே வென்று உள்ளது.
ஹிரியூரில் ம.ஜ.த.,வுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. அக்கட்சி, 2 முறை வெற்றி பெற்று உள்ளது. வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக யாதவர், ஒக்கலிகர் சமூக ஓட்டுகள் உள்ளன.
ஒக்கலிகர் ஓட்டுகளை கவரும் வகையில், ஹிரியூர் தொகுதியில் ம.ஜ.த., வேட்பாளரை நிறுத்த, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி திட்டமிட்டு உள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன், சித்ரதுர்கா, ஹிரியூர் பகுதிகளை சேர்ந்த, கட்சி பிரமுகர்களுடன் கூட்டம் நடத்தி உள்ளார். 'ஹிரியூரில் ம.ஜ.த., வேட்பாளர் போட்டியிட, பா.ஜ., மேலிடத்திடம் பேசி 'சீட்' வாங்கி கொடுப்பது எனது பொறுப்பு; வேட்பாளரை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு' என்று பிரமுகர்களிடம் கூறி உள்ளார்.
கட்சி பிரமுகர்களும் ஒப்பு கொண்டதால், பா.ஜ., மேலிட தலைவர்களுடன் விவாதிக்க, குமாரசாமி தயாராகி வருகிறார்.
ஹிரியூர் தொகுதியில் வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில், யாதவர், ஒக்கலிகர் சமூக ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும் கன்னட ஜெயின் சமூகத்தை சேர்ந்த டி.சுதாகர், அத்தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று இருப்பதும் கவனிக்கத்தக்கது.
