ADDED : ஜூலை 03, 2026 04:37 AM
சித்ரதுர்கா: ஹிரியூர் தொகுதி இடைத்தேர்தலில் ம.ஜ.த., வேட்பாளரை போட்டியிட வைக்க, மத்திய அமைச்சர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். தொகுதியை விட்டு தரும்படி பா.ஜ., தலைவர்களிடம் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார்.
கர்நாடக திட்டம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக இருந்தவர் டி.சுதாகர், 65. உடல்நலக்குறைவால், கடந்த மே மாதம் 10 ம் தேதி மரணம் அடைந்தார். அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த ஹிரியூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்தொகுதியில் இதுவரை 18 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், ம.ஜ.த., 2 முறையும், பா.ஜ., ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளன. மற்ற தேர்தல்களில் காங்கிரஸ், சுயேச்சைகள் தான் வெற்றி பெற்று உள்ளனர்.
பா.ஜ.,வை காட்டிலும் ஹிரியூரில் ம.ஜ.த.,வுக்கு செல்வாக்கு உள்ளதால், இடைத்தேர்தலில் ம.ஜ.த., வேட்பாளரை போட்டியிட வைக்க, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். ஹிரியூர் தொகுதி ம.ஜ.த., தலைவர்கள், பிரமுகர்களுடன் பேச்சும் நடத்தி உள்ளார்.
தொகுதியை தங்களுக்கு விட்டு தரும்படி பா.ஜ., தலைவர்களிடமும் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக சுதாகர் மகன் சுகாஷ் போட்டியிட வாய்ப்பு உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., பூர்ணிமாவும் 'சீட்' கேட்கிறார்.
