மாணவருக்கு ரூ.1,000 டிபாசிட் செய்யும் ஹெச்.எம்., பள்ளியில் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி
மாணவருக்கு ரூ.1,000 டிபாசிட் செய்யும் ஹெச்.எம்., பள்ளியில் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி
ADDED : மே 21, 2026 10:13 PM

கதக்: அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, ஆர்வம் காட்டாத நிலையில், பள்ளி ஆசிரியர் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தன் சொந்த பணத்தில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவருக்கு, 1,000 ரூபாய் டிபாசிட் செய்ய முன் வந்துள்ளார்.
அரசு பள்ளிகள் என்றாலே, முகத்தை சுழிப்போரே அதிகம். இங்கு தரமான கல்வி கிடைக்காது. ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அடிப்படை வசதிகள் இருக்காது என, நினைக்கின்றனர்.
எனவே கடன் வாங்கியாவது, பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். இதன் விளைவாக பெரும்பாலான அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைகிறது. மாணவர்கள் இல்லாத காரணத்தால், பல பள்ளிகள் மூடப்பட்டன.
அரசு பள்ளிகளில் மாணவர்களை ஈர்க்க, இலவச பாட புத்தகங்கள், மதிய உணவு, பால், சைக்கிள், சீருடை என, அனைத்தையும் அரசு வழங்குகிறது. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை.
கதக் மாவட்டம், முன்டரகி தாலுகாவின், கேலுாரு கிராமத்தை சேர்ந்த அரசு தொடக்க பள்ளியில், எஸ்.எம்.பாட்டீல் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இவர் இதற்கு முன், தாலுகாவின் கதாப்பொரா கிராமத்தில், கல்வித்துறையில் பணியாற்றினார். இவர் இரண்டு நாட்களுக்கு முன், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, கேலுாரு கிராமத்துக்கு வந்தார்.
பொறுப்பேற்ற உடன், பள்ளியில் மாற்றங்களை கொண்டு வந்தார். மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார். ஒன்றாம் வகுப்பில் சேரும் சிறார் களுக்கு, தன் சொந்த பணத்தில், தலா, 1,000 ரூபாய் டிபாசிட் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கான தொகையை, ஏற்கனவே பள்ளி மேம்பாட்டு கமிட்டியிடம் வழங்கியுள்ளார்.
ஆசிரியர் எஸ்.எம்.பாட்டீல் கூறியதாவது:
நடப்பு கல்வியாண்டில், எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேரும், அனைத்து மாணவர்களுக்கும் டிபாசிட் செய்ய முடிவு செய்துள்ளேன். இதற்கு தேவையான பணத்தை, பள்ளி மேம்பாட்டு கமிட்டியிடம் வழங்கியுள்ளேன்.
பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கும், திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளேன்.
சிறார்களுக்கு கல்வி பாதுகாப்பு அளிப்பது, அவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது, அவர்களின் எதிர்காலத்துக்கு அஸ்திவாரம் போடுவது போன்றவையே என் குறிக்கோள்.
இந்த திட்டத்தை பெற்றோர் பயன்படுத்தி கொண்டு, பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
