வீடு கட்டுவோர் 30 நிமிடத்தில் வரைபடம் பெறும் திட்டம் அறிமுகம்: அமைச்சர் தகவல்
வீடு கட்டுவோர் 30 நிமிடத்தில் வரைபடம் பெறும் திட்டம் அறிமுகம்: அமைச்சர் தகவல்
ADDED : செப் 19, 2026 11:36 PM

பெங்களூரு: ''பெங்களூரில் வீடு கட்டுவோரின் வசதிக்காக, மாநில அரசு, 'நம்பிக்கை வரைபடம் 2.0' என்ற தொழில்நுட்பத்தை, அறிமுகம் செய்துள்ளது. இனிமேல் வீட்டுக்கான கட்டட வரைபடத்துக்கு, 15 முதல் 30 நிமிடங்களில் அனுமதி பெறலாம்,'' என, பெங்களூரு நகர மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்தார்.
பெங்களூரின், விகாஸ்சவுதாவில், நம்பிக்கை வரைபடம் 2.0 தொழில்நுட்பத்தை, அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
இதற்கு முன், ஒரு கட்டட வரைபடத்துக்கு, அனுமதி பெற குறைந்தபட்சம் ஒன்று முதல், இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிகாரிகளின் கையெழுத்து, ஆவணங்கள் பரிசீலனை என அலுவலகம், அலுவலகமாக அலைந்து மக்கள் சோர்ந்து போயினர்.
இனிமேல், நம்பிக்கை வரைபடம் 2.0 தொழில்நுட்ப உதவியால், வெறும் 15 முதல், 30 நிமிடங்களில் கட்டட வரைபடத்துக்கு, அனுமதி பெறலாம். இடைத்தரகர்களின் தொந்தரவை, தடுக்கும் நோக்கில் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளோம்.
வீடு கட்டுவோர், எந்த அதிகாரிகளின் அலுவலகங்களுக்கும் சென்று, கை கட்டி நிற்க வேண்டியது இல்லை. கட்டட வரைபடத்தை, 'கேஏடி பார்மட்'டில் அப்லோட் செய்தால் போதும். கம்ப்யூட்டர் தொழில்நுட்பமே, வரைபடத்தை படித்து, விதிமுறைகளின் படி உள்ளதா என்பதை, ஆய்வு செய்யும்.
சொத்து ஆவணங்களையும், தானாகவே பரிசீலிக் கும். மக்கள் தாக்கல் செய்த வரைபடம் மற்றும் ஆவணங்கள், விதிமுறைப்படி இருந்தால், 15 முதல் 30 நிமிடத்தில் வீடு கட்ட, சட்டப்பூர்வமான அனுமதி கிடைக்கும். 50 க்கு 80 அடி அளவுள்ள மனைகளில், அதிகபட்சம் நான்கு மாடி கட்டுவோருக்கும், 4,000 சதுர அடி வரை குடியி ருப்பு கட்டடங்களுக்கும், இந்த விதிமுறை பொருந்தும்.
புதிய தொழில்நுட்பம் சோதனை முறையில், சில பகுதிகளில் இன்று (நேற்று) முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வரும் நாட்களில் பெரிய கட்டடங்களுக்கும், இந்த நடைமுறை விஸ்தரிக்கப்படும்.
மக்கள் மீது நம்பிக்கை வைத்து, புதிய தொழில் நுட்பத்தை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். விதிமுறைப்படி வீடு கட்டுவோருக்கு, எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பது, என் குறிக்கோள்.
ஒருவேளை இந்த தொழில்நுட்பத்தை, யாராவது தவறாக பயன்படுத்தினால், சட்டப்படி பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
