சிறுவனை கடத்தி கொன்றதற்கு ஆன்லைன் விளையாட்டு காரணம்
சிறுவனை கடத்தி கொன்றதற்கு ஆன்லைன் விளையாட்டு காரணம்
ADDED : செப் 19, 2026 11:36 PM

பெங்களூரு: பெங்களூரு எலஹங்கா அருகில் உள்ள விநாயகா நகரில் வசிப்பவர் மனோகர். பா.ஜ., பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மகன் பிரஜ்வல், 13, எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் பாஸ்கர் ரெட்டி, 28. இவர் லண்டனில் எம்.டெக்., முடித்தவர். பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். பக்கத்து வீட்டில் வசித்ததால் இரண்டு குடும்பத்தினரும் நெருங்கி பழகினர். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட பாஸ்கர் ரெட்டி, மனோகரின் பிள்ளைகளுடன் நட்பாக இருந்தார்.
மனோகரிடம் நிறைய பணம் இருப்பதாக நினைத்த பாஸ்கர் ரெட்டி, அவரை மிரட்டி பணம் பறிக்க சதி திட்டம் தீட்டினார். இம்மாதம் 16ம் தேதியன்று, விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் வெடிக்க, பட்டாசு வாங்கி வரலாம் என, ஆசை காண்பித்து, பிரஜ்வலை, காரில் அழைத்து சென்றார்.
பாகலுார் அருகில் ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்கு அழைத்து வந்தார். அங்கிருந்து பிரஜ்வலின் தந்தைக்கு போன் செய்து, 'ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மகனை கொலை செய்வேன்' என, மிரட்டினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனோகர், உடனடியாக பாஸ்கர் ரெட்டியின் பெற்றோரிடம் விஷயத்தை கூறி, தன் மகனை காப்பாற்றும்படி வேண்டினார்.
அவர்களும் பாஸ்கர் ரெட்டிக்கு போன் செய்து, சிறுவனை அழைத்து வந்து, பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி எச்சரித்தனர். இதற்கிடையே, மகன் கடத்தப்பட்டது குறித்து, போலீசாரிடம் மனோகர் புகார் அளித்தார். போலீசாரும் தேட துவங்கினர்.
பீதியடைந்த பாஸ்கர் ரெட்டி சிறுவனின் தலையில் சிமென்ட் கல்லை போட்டு கொலை செய்தார். உடலை கார் டிக்கியில் வைத்து, ஆந்திராவுக்கு தப்ப முயற்சித்தார்.
ஆனால், பல்லாரி சாலையில், காரை குறுக்கும், நெடுக்குமாக காரை ஓட்டி, தொடர் விபத்தை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் சிக்கினார். இவரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரகசியம் போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை, சோதனை செய்த போது, சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் பாஸ்கர் ரெட்டியை போலீசார் விசாரித்த போது, கொலை ரகசியம் அம்பலமானது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான பாஸ்கர் ரெட்டி, பல இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.
இதை அடைக்க பணம் தேவைப்பட்டதால், பக்கத்து வீட்டு சிறுவன் பிரஜ்வலை கடத்தினார். போலீஸ் பயத்தில் அவரை கொலை செய்துள்ளார்.
சிறுவன் பிரஜ்வலும், பாஸ்கர் ரெட்டியும் நல்ல நட்புடன் இருந்துள்ளனர். நல்ல கல்வி, வசதியான குடும்ப பின்னணி இருந்தும், ஆன்லைன் சூதாட்டம், அவரை கொலைகாரனாக ஆக்கியுள்ளது.
இந்த கொலையில், பாஸ்கர் ரெட்டியின் நண்பருக்கு தொடர்புள்ளது. அவரை தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
