வெளிநாட்டு பெண் பலாத்காரம் 'ஹோம் ஸ்டே' உரிமம் ரத்து
வெளிநாட்டு பெண் பலாத்காரம் 'ஹோம் ஸ்டே' உரிமம் ரத்து
ADDED : ஏப் 24, 2026 04:17 AM
குடகு: வெளிநாட்டு பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்த ஹோம் ஸ்டேயின் உரிமத்தை சுற்றுலா துறை ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்த இளம் பெண், குடகு மாவட்டத்துக்கு கடந்த, 19ம் தேதி சுற்றுலா வந்தார். விராஜ்பேட்டை தாலுகாவின் குட்டா கிராமத்தில், 'தேவி வில்லா ஹோம்ஸ்டே'யில் தங்கினார்.
அங்கு பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விரிஜேஷ் குமார், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இவ்விஷயத்தை ஹோம் ஸ்டே உரிமையாளர் விஷாலிடம், அப்பெண் கூறினார்.
அவரோ போலீசில் புகார் அளிக்காமல், பெண்ணின் மொபைல் போனை வாங்கிக் கொண்டு அறையில் அடைத்து வைத்தார்.
இரண்டு நாட்களுக்கு பின், போலீசில் புகார் அளிக்கக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார். மைசூரு வந்த அந்த பெண், அமெரிக்க துாதரகத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். இதையடுத்து, குட்டா ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விரிஜேஷ் குமார் மற்றும் விஷாலை கைது செய்தனர்.
இந்நிலையில், சுற்றுலா துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியது; சட்ட விரோத நடவடிக்கை காரணமாக, 2024 ஜனவரி முதல் உரிமம் பெற்றிருந்த, 'தேவி வில்லா ஹோம் ஸ்டே'யின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோம் ஸ்டேக்களும் சுற்றுலா பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
