/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கதர் கொடிகளுக்கு குறைந்த 'மவுசு' நஷ்டத்தில் ஹூப்பள்ளி தொழிற்மையம்
/
கதர் கொடிகளுக்கு குறைந்த 'மவுசு' நஷ்டத்தில் ஹூப்பள்ளி தொழிற்மையம்
கதர் கொடிகளுக்கு குறைந்த 'மவுசு' நஷ்டத்தில் ஹூப்பள்ளி தொழிற்மையம்
கதர் கொடிகளுக்கு குறைந்த 'மவுசு' நஷ்டத்தில் ஹூப்பள்ளி தொழிற்மையம்
ADDED : ஆக 12, 2025 11:59 PM

ஹூப்பள்ளி: மூவர்ண கொடி தயாரிக்கும் ஹூப்பள்ளி மையத்தில், கதர் துணியால் தயாராகும் கொடிகளுக்கு மவுசு குறைந்துள்ளது. பிளாஸ்டிக் கொடிகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஹூப்பள்ளியில் மூவர்ண தேசிய கொடி உற்பத்தி செய்யும் மையம் உள்ளது. இங்கு கதர் துணியை பயன்படுத்தி கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. இது கதர் துணியில் மூவர்ண தேசிய கொடி உற்பத்தி செய்யும், நாட்டின் ஒரே மையம். இங்கு தயாராகும் கொடிகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன.
குறைகிறது ஆகஸ்ட் வந்தால் போதும், இந்த மையத்தில் நாள் முழுதும் பெண்கள், மூவர்ண தேசிய கொடி தயாரிப்பதில் ஈடுபடுவர். ஆண்டுக்கு 2.7 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்தது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு, வர்த்தகம் குறைகிறது. சுதந்திர தினம் நெருங்கும் நிலையில், வெறும் 49 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ஆர்டர் வந்துள்ளது.
இதற்கு முன்பு, கதர் துணியால் கொடிகளுக்கு டிமாண்ட் இருந்தது. விற்பனையும் அதிகரித்தது. ஆனால் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி, பாலியஸ்டர் கொடிகள் பறக்க விட, மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதன்பின் மார்க்கெட்டில் பாலியஸ்டர் கொடிகள் பயன்பாடு அதிகரித்தது. பெரும்பாலான அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் சுதந்திர தினம், குடியரசு தினம் உட்பட, மற்ற சிறப்பு நாட்களில் பாலியஸ்டர் கொடிகள் பயன்படுத்த துவங்கின.
பாலியஸ்டர் இரண்டு ஆண்டுகளாக குஜராத்தின் பாலியஸ்டர் கொடி தயாரிப்பு தொழிற்சாலைகள் லாபம் அடைகின்றன. ஆனால் ஹூப்பள்ளியில் உள்ள கதர் கொடி தயாரிப்பு மையம் நஷ்டம் அடைகிறது. கதர் கொடிகளை விட, பாலியஸ்டர் கொடிகளின் விலை குறைவு. எனவே பாலியஸ்டர் வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து, ஹூப்பள்ளியின், கதர் பெடரேஷன் செயலர் சிவானந்த் கூறியதாவது:
தேசிய கொடி சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததால், அரசு அலுவலகங்களிலும் பாலியஸ்டர் கொடிகளை ஏற்றுகின்றனர். கதர் கொடிகள் விலை அதிகம் என்பதால், பாலியஸ்டர் கொடிகள் பயன்படுத்துகின்றனர். கதர் கொடிகளின் ஆயுட்காலம் அதிகம் என்றாலும், விற்பனை குறைந்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசுக்கும், கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று அரசு நிறுவனங்கள் கதர் துணி கொடிகளை பறக்க விட உத்தரவிடும்படி கோரியுள்ளோம்.
வர்த்தகம் குறைந்ததால், இம்முறை எங்களால் அதிகமான பெண்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. கதர் கொடிகளை பயன்படுத்துவதை கட்டாயமாக்கி, சுற்றறிக்கை வெளியிட வேண்டும். தேசிய கொடிகளுடன், எங்கள் தொழிற்சாலையில் கதர் பைகள், உடைகள், படுக்கை விரிப்புகள் தயாரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.