/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பயங்கரம்! அரசு பள்ளிக்குள் நுழைந்து தெருநாய் வெறியாட்டம்: மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
/
பயங்கரம்! அரசு பள்ளிக்குள் நுழைந்து தெருநாய் வெறியாட்டம்: மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பயங்கரம்! அரசு பள்ளிக்குள் நுழைந்து தெருநாய் வெறியாட்டம்: மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பயங்கரம்! அரசு பள்ளிக்குள் நுழைந்து தெருநாய் வெறியாட்டம்: மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ADDED : ஆக 16, 2025 11:19 PM
கொப்பால்: கர்நாடகாவின் கொப்பாலில் அரசு பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதி ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில். நேற்று ஒரே நாளில் தெருநாய்கள் வெறியாட்டம் நடத்தின. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் தெருநாய்களின் வெறிக்கடித் தாக்குதலுக்கு உள்ளாகினர். தெருநாய் கடித்ததால் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்தும் விஷயத்தில், கர்நாடக அரசு அலட்சியம் காட்டி வருவது, மாநில மக்களை கோபப்படுத்தி உள்ளது.
நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தெருநாய்களின் தொல்லை அத்துமீறியுள்ளது. தெருநாய்களால் குழந்தைகளும் முதியோரும் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
தேசிய தலைநகர் டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியங்களான உத்தர பிரதேசத்தின் நொய்டா, காஜியாபாத், ஹரியானாவின் குருகிராமில் நாய் கடி சம்பவங்கள் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, நீதிபதி ஆர்.மஹாதேவன் அடங்கிய அமர்வு, தெருநாய்களை அகற்ற டில்லி அரசுக்கு உத்தரவிட்டதுடன், இதற்கு எதிராக யார் வந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டனர். தெருநாய்களை விட, மனித உயிரே முக்கியம் என, தங்கள் உத்தரவில் நீதிபதிகள் கவனத்தில் கொண்டிருந்தனர்.
பீதியில் மக்கள் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு, கர்நாடகாவுக்கும் பொருந்துமா; கர்நாடக காங்கிரஸ் அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் கர்நாடகா அரசோ, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட, தெருநாய்களை கட்டுப்படுத்த, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை.
இதற்கிடையில், தெருநாய்களால் கர்நாடகாவில் நேற்று இரு பயங்கர சம்பவங்கள் நடந்துள்ளன.
கொப்பால் மாவட்டம் குகனுார் தாலுகாவில் உள்ள தலக்கல், தலபாலா கிராமத்தில், கடந்த சில தினங்களாக வெறிநாய் ஒன்று சுற்றித்திரிகிறது. சாலையில் நடந்து செல்வோர்; வாகனங்களில் செல்வோரை விரட்டிச் செல்கிறது. பீதியில் இருக்கும் இரு கிராம மக்களும், வீடுகளில் இருந்து வெளியே வரவே பயப்படும் நிலை உருவானது.
அட்டகாசம் செய்யும் தெருநாயை பிடிக்க வேண்டும் என்று, கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம், கிராம மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை தலபாலா கிராமத்தில் உள்ள, அரசு பள்ளி வளாகத்துக்குள் புகுந்த வெறிநாய், மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் என, 30க்கும் மேற்பட்டோரை விரட்டி, விரட்டிச் சென்று கடித்தது.
தலையில் காயம் இதேபோல், தலக்கல் கிராமத்தில் நேற்று காலை ஒரு தெருநாய், அங்கு வசிக்கும் மக்களை விரட்டி விரட்டி பீதியை ஏற்படுத்தியது.
தன் வீட்டின் முன், தெருவில் விளையாடிக் கொண்டு இருந்த யமனுார்சாப் மபுசாப் நடாப், 8, என்ற சிறுவன் மீது பாய்ந்த தெருநாய், சிறுவனை கடித்து குதறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், நாயை கல்லால் அடித்து விரட்டினர்.
நாய் கடித்து குதறியதால் சிறுவனுக்கு முகம், தலை, கன்னம், தொடை என, பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு, கொப்பால் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் சிலரையும் நேற்று நாய் கடித்தது. இரண்டு நாட்களில் 30க்கும் மேற்பட்டோரை, ஒரே நாய் கடித்து இருப்பதால், கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் அலட்சியத்தால் தான், தெருநாய் தொல்லை அதிகரித்து இருப்பதாக, பொதுமக்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
நிலைமை விபரீதம் ஆனதை உணர்ந்த, கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி வீரணகவுடா, தெருநாய்களை பிடிப்பது தொடர்பாக கிராம பஞ்சாயத்து ஊழியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகாவில், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 2.86 லட்சம் பேரை தெருநாய்கள் கடித்துள்ளன. இதில் 26 பேர் இறந்துள்ளனர். கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை மட்டும், மாநிலம் முழுதும் 5,562 பேர் தெருநாய் கடிக்கு பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நடந்தும் அரசு இன்னும் அலட்சியமாக உள்ளது.